இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீது கனடா பொருளாதாரத் தடை: வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதார தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் இராஜதந்திர ஆட்சேபனை வெளியிடுவதற்காக, கனடா உயர்ஸ்தானிகர், இன்று காலை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன்போது,’நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடையும் பொருட்டு, ஆழமாக வேரூன்றிய பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பயனற்றது என்றும் இது இலங்கையில் உள்ள சமூகங்களை துருவப்படுத்தக் கூடிய செயற்பாடு என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கனடா உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்பதோடு அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.