2022ல் 10 கோடி புலம்பெயர்ந்தோர்-ஐ.நா தெரிவிப்பு.

போர், மனித உரிமை மீறல்கள், வன்முறை போன்றவற்றால் புலம்பெயர்ந்துள்ள மக்களைக் காப்பாற்ற, அரசுகள் 113 கோடி டாலர் உதவிக்கு உறுதியளித்துள்ளன – UNHCR அமைப்பின் தலைவர் கிராந்தி கூறியுள்ளார்.

2022ஆம் ஆண்டில் நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயரும் நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவேளை, தேவையில் இருக்கும் அம்மக்களுக்கு உதவி வருவதோடு, பாதுகாப்பான புலம்பெயர்வுக்கு சட்டரீதியான வழிமுறைகளுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, ஐக்கிய நாடுகள் நிறுவனம்.

2022ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோர் நிலை குறித்து அறிவித்துள்ள UNHCR எனப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவர் Filippo Grandi அவர்கள், போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள், சித்ரவதைகள் போன்ற காரணங்களால் பத்து கோடிப் பேர், 2022ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இதுவரை புலம்பெயர்வு இடம்பெறவில்லை என்றும், இவ்வெண்ணிக்கை, 2021ஆம் ஆண்டைவிட மிக அதிகம் என்றும் கூறியுள்ள கிராந்தி அவர்கள், உக்ரைன், எத்தியோப்பியா, புர்க்கினா ஃபாசோ, சிரியா, மியான்மார் ஆகிய நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளில் இடம்பெறும் ஆயுதத் தாக்குதல்களே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இம்மக்களில் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பாவில் குடியேற விரும்பும்வேளை, அவர்களின் வாழ்வு மனித வர்த்தகர்களிடம் சிக்கிவிடுகின்றது என்றும், பலர் மத்தியதரைக் கடல் வழியாக ஆபத்தான கடல்பயணம் மேற்கொள்கின்றனர் என்றும் கிராந்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இப்பயணங்கள் அடிக்கடி கொடுந்துயரிலே முடிவடைகின்றன எனவும், ஏமன் நாட்டில் சவுதியின் தலைமையில் ஏமன் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், Houthi புரட்சியாளர்களுக்கும் இடையே ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் போரில் 43 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு புலம்பெயர்ந்துள்ளனர் எனவும் ஐ.நா. கூறியுள்ளது.

சிரியாவில் 11 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் தாக்குதல்களின்போது பிறந்த ஏறத்தாழ ஐம்பது இலட்சம் சிறாருக்கு அந்நாடு அமைதியில் இருந்த நிலையே தெரியாது என்றும், ஜோர்டனில் சிரியாவைச் சேர்ந்த ஏறத்தாழ 6,75,000 பேர் புலம்பெயர்ந்தோராகப் பதிவுசெய்துள்ளனர் என்றும் கிராந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இத்தகைய கொடுந்துயரங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் ஓர் ஒளிக்கதிர் தெரிகின்றது என்றும், போர், மனித உரிமை மீறல்கள், வன்முறை போன்றவற்றால் புலம்பெயர்ந்துள்ள மக்களைக் காப்பாற்ற, அரசுகள் 113 கோடி டாலர் உதவிக்கு உறுதியளித்துள்ளன என்றும், UNHCR அமைப்பின் தலைவர் கிராந்தி அவர்கள் கூறியுள்ளார்.