இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் ஆரம்பம்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரி வரை இந்த பயணிகள் படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த படகு சேவைக்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் கொழும்புக்கு சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரிக்கு பயணம் செய்ய சுமார் மூன்றரை மணி நேரம் ஆகும் என கூறப்படுகின்றது.

ஒரு பயணத்தின் போது 30) முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயணி ஒருவரிடமிருந்து 5000 ரூபாய்க்கு இணையான கட்டணம் வசூலிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பயணி 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.