இந்தியாவின் தலைமையில் நான்கு நாடுகளின் மேற்பார்வை வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடருமானால் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற செல்வம் அடைக்கலநாதன், இல்லாவிட்டால் தமிழரை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

வவுனியாவில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டிருக்கும்  நிலையில் இந்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும் எனவும் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். இனப்பிரச்சனை தொடர்பாக மஹிந்த காலத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது. நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரப்பட்டாலும் ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமருக்கும் பிரச்சனை வந்ததால் தட்டிக்கழிக்கும் முனைப்பு இருந்தது.

தற்போதும் இந்த பேச்சுவார்த்தை ஐ.நா சபையின் தீர்மானம், உலக நாடுகளின் அழுத்தம் அல்லது பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இதனை காரணம் காட்ட இந்த பேச்சு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம்எழுந்துள்ளதாக தெரிவித்தார்.இருந்தாலும் பேச்சுக்கு சென்று தமிழர் நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம் என்றுமு;, இல்லாவிட்டால், அவர்கள் பேச்சுக்கு வராததால் தம்மால் எதனையும் செய்ய முடியவில்லை என நல்ல பெயரை எடுக்கும் சந்தர்ப்பமும் அரசாங்கத்துக்கு உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதுவரை காலம் அரசாங்கங்களோடு இனப்பிரச்சனை விடயத்தை பேசி வந்து நாம் ஏமாற்றப்பட்டவர்கள். இந்த பேச்சுவார்த்தை தொடருமாக இருந்தால் இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை இருக்க வேண்டும் என்பது தமது பிரதான கோரிக்கையாக இருக்கும்.இல்லாவிட்டால் எம்மை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும். அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த விட முடியாது’ எனவும் அவர் தெரிவித்தார்.