இறுதியுத்தத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரனின் மனைவி, மகளின் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது!

முன்னாள் இராணுவத்தளபதி.

விடுதலைப்புலியின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகளின்  படங்கள் என்னிடம் உள்ளன. ஆதாரங்களை வெளியிட்டதால் அன்றைய ஆட்சியாளர்களால் எனக்கு எதிராக  5 முறை கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டது என முன்னாள் இராணுவ தளபதி அசித சரிவர்தன தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த நேர்காணலில் அன்றைய ஆட்சியாளர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த நேர்காணலில்,

கேள்வி – அசித முதலில் நீங்கள் யார்? பல இலட்ச மக்கள் திரும்பி பார்க்கும் வகையில் தகவல்களை வழங்குகின்றீர்கள் யார் நீங்கள்? நீங்கள் வழங்கும் செய்திகள் உண்மையா? பொய்யா?.

பதில் – நான் பொய்யான தகவலை வழங்குவது என்றால், இவ்வாறு வந்து பேச மாட்டேன். உங்களுக்கு நன்கு தெரியும், நான் யுத்த நேரத்தில் அனைத்து இடங்களிலும் இருந்தேன்.  நான் ஏனோதானோ என்று செயற்பட்டால் என்னை ஒரு பொருட்டாகக் கூட நினைத்து இருக்கமாட்டார்கள்.

ஆனால், நான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான முறையில் ஆதாரங்களை வெளியிட்டதால்தான், என்னை 19 மாதகாலமா, இரகசியமான முறையில் சிறையில் அடைத்து, 5 தடவை கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

கிறிஸ்து சுபசிங்க யார்? லசந்த விக்ரமதுங்கவை தாக்கியது யார்? என்பது தொடர்பில் அனைத்து ஆதாரங்களும், புகைப்படங்களும் என்னிடம் உள்ளது.

கேள்வி – நான் உங்களை பிழையானவர் என்று கூறவில்லை. ஆனால் என்னிடம் சிலர் கேட்டனர், நீங்கள் ஒரு மன நோயாளி, இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர், ஐக்கிய அமெரிக்கா அனுப்பியும், அங்கும் இவர்கள் வசிக்க முடியாது என்று. எனவே, நான் தெரிந்து கொள்ள வேண்டும் நான் யாருடன் பேசுகின்றேன் என்று, ஏனென்றால் நீங்கள் கூறும் நபர்கள் சாதாரணமானவர்கள் இல்லை.

பதில் – ஆம். பிரபாகரன், பிரபாகரனின் மகன், பிரபாகரனின் மனைவி, பிரபாகரனின் மகள் ஆகியோரை எனது புகைப்பட கருவியில் எடுத்த புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. பிரபாகரனின் மகளை இன்றும் சென்று இணையத்தில் தேடி பாருங்கள், பிரபாகரனின் மகள், மனைவியின் புகைப்படங்கள் அதில் இல்லை. ஆனால் என்னிடம் உள்ளது. நான் மன நோயாளி என்றால் என்னுடைய மருத்துவ உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் உள்ளன.

அதேபோல, கிறஸ் சுபசிங்க. இவருக்கு பொய்யான பல முகப்புத்தக கணக்குகள் உள்ளன. இவர்தான் பொன்சேகா மற்றும் முன்கூறிய நபர்கள் மீது தாக்கியவர்.

நான் மன நோயாளி என்றால் இதனை கூற முடியுமா? அதேபோல, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றது நாட்டை காப்பாற்றுவதற்கு. நீங்கள் ஒரு ஊடகவியலாளர் உங்களுக்கு தெரியுமா, ஒரு புகைப்படத்தை காண்பித்தால், அதை எந்த புகைப்பட கருவியில் எடுத்தார் என்று அறிய முடியுமா? நான் 20 வருடம் இராணுவத்தில் இருந்து, எனக்கு இவ் விடயம் தெரியாது.

கேள்வி – இவர் ஆச்சரியத்திற்குள்ளாகும் தகவல்களை வெளியிடுகிறார் என்று பலர் என்னிடம் கேட்கின்றனர்.

பதில் – உண்மையில் எனக்கு பைத்தியம் என்றால் 157 ஆவது நபராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கேள்விக்கு பதில் கூற முடியுமா? அங்கு முப்படையினரை தூற்றி மஹிந்தவின் ஆட்கள் 44 பேர் கூறினர்.

நான்தான் அனைவரையும் காப்பாற்றினேன்.

கேள்வி – நீங்கள்தான் அனைத்தையும் செய்தீர்கள் என்றால், உங்கள் மீது மஹிந்தவுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

பதில் – அதாவது 19வது கதை, மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். வெல்லவங்கவல விகாரை தேரரை சந்தித்து மஹிந்தவின் சூழ்ச்சி குறித்து கலந்துரையாடினேன். சியம்பலங்கமுங்வே யானையை கொன்று தந்தத்தை தலதா மாளிகைக்கு பூஜை செய்ய ஆயத்தமாக இருந்தனர்.

அந்நேரத்திலேயே, தேரர், மஹிந்தவுடன் தொலைபேசியினூடாக பேசிய போது, மஹிந்த தேரரை கோபத்துடன் திட்டி தொலைபேசியை துண்டித்து விட்டார். பின்னர் மஹிந்த நாட்டை விட்டு சென்றுள்ளார். உண்மையில் மஹிந்தவிற்கு பைத்தியம் பிடித்தது. மஹிந்தவை சிங்கப்பூரிற்கு அழைத்து சென்றனர்.

உண்மையில் நாட்டில் யார் யார் எவ்வாறு மாறுவார்கள் என்பது நமக்கு தெரியாது. குழப்பங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்து காணப்படுகின்றன.

நான் யுத்த நேரத்தில் எடுத்த புகைப்படங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வழங்கியபோது, அவர்கள் கேட்டது, புகைப்படங்கள் எவ்வாறு எடுத்தீர்கள்? எத்தனை புகைப்பட கருவிகள் பயன்படுத்தினீர்கள் என்று, நான் 2 புகைப்படக் கருவியில் படங்கள் எடுத்தேன்.

கேள்வி (சிரிப்புடன்) – யுத்த நேரத்தில் உங்களிற்கு புகைப்படம் எடுக்க நேரம் இருந்ததா? தனியாக எவ்வாறு புகைப்படம் எடுத்தீர்கள். நீங்கள் சொல்வது உண்மை என்று எவ்வாறு நம்புவது?

பதில் – அதுதான் என்னுடைய திறமை. இப் புகைப்படங்கள் நான் எடுத்தது.

கேள்வி – வெளிநாட்டு உதவிகள் கிடைத்தமையாலா இவ் யுத்தம் முடிவுக்குக்கு வந்ததது?

பதில் – அதாவது சுப்ரமணியன் சுவாமி, நாங்கள் தோற்று இருந்து நிலையில் மஹிந்தவை சந்திக்க வந்தார். இவருடன் இணைந்து கொண்டு விடுதலைப் புலிகளோடு பல விரோத செயல்களை செய்தார்.

விடுதலைப் புலிகள் மஹிந்தவை காப்பாற்றவே உள்ளனர், அவரை புலிகளிற்கு சார்பானவராகவும், சார்பில்லாதாவராகவும் காண்பித்து கொள்கின்றார். ஆனால் விடுதலைப் புலிகள் மஹிந்தவை காப்பாற்றுகின்றனர்.

மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய விடயம், தாம் பெரிய சூழ்ச்சி வலையில் சிக்கி உள்ளனர் என்பதை அறிய வேண்டும். இன்றும் அதே நிலைதான் உள்ளது. நான் கூறும் யோசனைகளையும் யாரும் செவிசாய்க்கவில்லை மக்கள் சிந்திக்க வேண்டும்

கேள்வி – நீங்கள் இறுதியில் கேட்பது நாட்டை நீங்கள் ஆழவா?

பதில் – ஆம். நான் நாட்டை சிறப்புற நடத்தி செல்ல, மக்கள் என்னுடன் இணைந்து செயற்படுவார்களாயின் நாட்டை சிறப்புற என்னால் ஆட்சி செய்ய முடியும். உண்மையில் நாட்டில் பல துறைகளில் அமைப்பை மாற்றினால் நாட்டை வலுப்படுத்த முடியும்.- – என்றார்.