இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக உயர்வு .

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி உள்பட 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் முடுக்கிவிட்டப்பட்டன. இதில் 162 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் விடியவிடிய நடந்தது.

அந்த வகையில் நேற்று காலை இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது. அதே போல் 200-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதன் மூலம் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது.

இவர்களில் சுமார் 300 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தநிலையில், ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல குழந்தைகள் பலியாகி உள்ளனர், இதுவரை சுமார் 1000 பேர் காயமடைந்த நிலையில் 151 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.