மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகளுக்கு இராணுவம் தொடர்ந்து இடையூறு

போரில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை சுத்தம் செய்து மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகி வரும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இராணுவம் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு நவம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தப்படுத்திய பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய மக்கள் 592ஆவது படைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டனர்.
புதைகுழிகள் அமைந்துள்ள காணி இராணுவத்திற்கு சொந்தமான காணி எனவும், துப்புரவு பணிகளை மக்கள் மேற்கொள்ளலாம் எனவும் எனினும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூற முடியாது எனவும் கட்டளைத் தளபதி பிரிகேடியர் எஸ்.டி.பி சமிந்த ஆராச்சிகே இதன்போது தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி அந்த எச்சரிக்கையை விடுத்த நாளில் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்க எதிர்ப்புக் கிளர்ச்சியில் உயிரிழந்த தனது தோழர்களை கொழும்பில் மாவீரர்களாகக் கொண்டாடியது.
கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கே. விஜிந்தன் அதன் உறுப்பினர்களான டி.அமலன், ஆர்.ஜெகன் மற்றும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 592 படைத் தளபதியிடம், புதைகுழி அமைந்துள்ள காணி உள்ளுராட்சி மன்றத்துக்குச் சொந்தமானது எனவும், அங்கு உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கு இராணுவ அனுமதி தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களை நினைவு கூருவது தங்களின் உரிமை என சுட்டிக்காட்டிய குழுவினர், இராணுவ முகாமை விட்டு வெளியேறி துயிலும் இல்லத்தை சுத்தப்படுத்துவதற்காக திரும்பிச் சென்றதாக மாகாண செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மாவீரர் துயிலும் இல்லங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழர்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
நவம்பர் 2ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் பிரதித் தலைவர் எம்.பி.செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக வீதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்விடத்திற்கு வந்த இராணுவ வீரர்கள் துப்புரவு பணியை நிறுத்த வேண்டுமென அவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது, மயானத்துக்கு முன்பாக உள்ள வீதியில் பௌத்தக் கொடிகளை நாட்டுவதற்கு இராணுவத்தினர் முயன்ற விடயம் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களின் கமெராவில் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், மன்னார் மாந்தை மேற்கு ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய இடங்களில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் இராணுவத்தின் கெடுபிடிகளை சந்தித்த நிலையில், திருகோணமலை, சம்பூர், ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்ல துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திர குமார் பொன்னம்பலத்திடம் அந்த பணிகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.