அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் அணிக்கு தோல்வி,இலங்கை தொழிலாளர் தலைவருக்கு வெற்றி

இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதிபெறத் தவறிய இலங்கை கிரிக்கெட் அணி, சிட்னியில் தனது நட்சத்திரங்களில் ஒருவரை விட்டுவிட்டு நாடு திரும்பிய நிலையில்,
இலங்கையைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் கங்காரு தேசத்தில் தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதில் முன்னின்று பங்காற்றியுள்ளார்.
க்னாப் ஏயு (Knauf AU) நிறுவன வாயிலில் 40 நாட்களாக தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தநிலையில், நிர்வாகம் தமது முக்கிய கோரிக்கையை நிறைவேற்ற மறுத்த நிலையில், நிர்மாணம் வனவியல் கடல்சார் சுரங்க மற்றும் வலுசக்தி தொழிற்சங்க (CFMEU) பிரதிநிதியான விராஜ் திசாநாயக்க தலைமையிலான தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இடதுசாரி தொழிற்சங்கத் தலைவராக இருந்து வரும் விராஜ், இலங்கையில் நீதிக்காக விக்டோரியாவில் பல போராட்டங்களை ஏற்பாடு செய்வதில் முன்னோடியாக செயல்பட்டவர்.
Knauf என்பது உட்புற வடிவமைப்பு, கட்டிட காப்பு மற்றும் வடிவமைப்பு கூரைகளுக்கான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி நிறுவனமாகும்.
நிரந்தர ஊழியர்களுக்குப் பதிலாக பாதுகாப்பற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கும் முன்னைய தீர்மானத்தை நிறுவனம் மீளப்பெற வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.
நிறுவனத்தின் இணையத்தள தகவல்களுக்கு அமைய Knauf AUவின் வருட வருமானம் 12.6 பில்லியன் யூரோக்கள். 90ற்கும் மேற்பட்ட நாடுகளில் 40,000ற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.
“தொழிலாளர்கள் மீதான இந்த தாக்குதலை தோற்கடிப்பது  Knauf தொழிலாளர்களின் எதிர்கால சந்ததிக்கு நாம் அளிக்கும் பரிசு. நாங்கள் கிட்டத்தட்ட ஆறு வாரங்களை நுழைவாயிலுக்கு வெளியே கழித்துள்ளோம், அதனால் அவர்கள் சிறந்த தொழில் பாதுகாப்பை அனுபவிக்க முடியும்” என விராஜ் திசாநாயக்க மெல்போர்னில் உள்ள சோசலிச சஞ்சிகையான Red Flagற்கு குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்துடனான வெற்றிகரமான பேச்சுவார்த்தையின் விளைவாக, நிறுவனம் சிறந்த பணி நிலைமைகள், வருமான பாதுகாப்பு திட்டம் மற்றும் மேலதிக நேர வேலைக்கான இரட்டை ஊதியம் ஆகியவற்றை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்த மூன்று வருடங்களுக்கு சம்பள உயர்வுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கமைய ஒப்பந்தத்தின் முதல் வருடத்தில் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 5 வீதமாகவும் ஒப்பந்தத்தின் அடுத்த மூன்று வருடங்களுக்கு  4 வீதமாகவும் உயர்த்தப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு இடம்பெற்ற மிக முக்கியமான விடயங்களில் ஒன்று ஊழியர்களை அதிகரிக்கவும் தொழிற்சங்கப் பயிற்சியை அதிகரிக்கவும் நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
விராஜ் திசாநாயக்க தலைமையிலான CFMEU தொழிலாளர்கள், தொழிலாளர் வாக்கெடுப்பின் ஊடாக வேலைநிறுத்த எச்சரிக்கையுடன் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது, செப்டெம்பர் நடுப்பகுதியில் அவுஸ்திரேலிய நிறுவனம் அவர்களை வெளியேற்றிய போதிலும், வாயில்களுக்கு முன்பாக தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், CFMNEU தொழிலாளர்கள் ஒரு கிளையில் மாத்திரம் 13,000 டொலர்களைத் திரட்டி வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்தனர். இந்த பிரச்சாரம் நாடு தழுவிய ஆதரவைப் பெற்றதோடு பல தனிநபர்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் இந்த காரணத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தன.
“இது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது பணியாளர்கள் ஒன்றுபட்டால் ஒருவருக்கு எவ்வளவு பலம் கிடைக்கும் என்பதை எங்களால் அறிய முடிந்தது” என Knauf ஊழியர் ஒருவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
பணியிடம் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும், நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களின் துன்புறுத்தல், அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள மற்றுமொரு தொழிலாளர் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது பணியிடத்தில் அப்படி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
“”உலகின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு அவர்கள் சர்வ வல்லமை படைத்தவர்கள் அல்ல என்பதை நாங்கள் காட்டினோம்.
மெல்போர்னைச் சுற்றியுள்ள மற்றும் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை வெளிப்படுத்தியுள்ளோம்.” என விராஜ் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் கீழ் சிட்னி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதோடு அவரது வழக்கு விசாரணை ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உதவ இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.