மூடப்படும் மெற்றோ ரயில் நிலையங்கள் போக்குவரத்து முழு அளவில் ஸ்தம்பிக்கும்.
Kumarathasan Karthigesu
பாரிஸ் பிராந்திய பொதுப் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வியாழக்கிழமை நடத்துகின்ற பணி நிறுத்தப் போராட்டம் காரணமாக நிலத்தடி மெற்றோ ரயில் நிலையங்கள் பல மூடப்படவுள்ளன.
வழித்தடங்கள் (les lignes) 2, 8, 10, 11, 12.ஆகியன நாளை முழு நாளும் முற்றாக மூடப்பட்டிருக்கும்.வழித்தடங்கள் 1 மற்றும் 14 ஆகியன தானியங்கி முறையில் செயற்படுவதால் அவற்றின் சேவைகள் வழமை போன்று இடம்பெறும். ஆயினும் வழித்தடம் 1 இல் Reuilly-Diderot, Bastille, Hôtel de Ville, Concorde மற்றும் Champs-Elysées Clémenceau ஆகிய நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
ஏனைய எல்லா வழித்தடங்களிலும் காலை 07.00-09.00 மணிக்கும் பிற்பகல் 16.30-19.30 மணிக்கும் இடையில் மட்டுமே ரயில்கள் ஓரளவு சீராகச் சேவையில் ஈடுபடும். ஏனைய நேரங்களில் நெருக்கடி காணப்படும். இந்த வழித்தடங்களில் பல ரயில் நிலையங்கள் மூடப்படவுள்ளன. அதனால் ரயில்கள் வழமை போன்று எல்லா நிலையங்களிலும் தரித்துச் செல்லமாட்டா.
இதனைவிட வெளியிடங்களுக்குச் செல்கின்ற RER A மற்றும் RER B ஆகியன மிகப் பெரிய அளவில் சேவைக் குறைப்புச் செய்யப்படவுள்ளன. பயணிகள் நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் (peak hours) மட்டும் மூன்று ரயில்களுக்குப் பதிலாக ஒரு ரயில் மாத்திரம் சேவையில் ஈடுபடும்.
நகரில் பஸ் சேவை வலைப்பின்னலும் (bus network) மூன்று பஸ்களுக்கு ஒன்று என்ற கணக்கில் குறைக்கப்பட்டிருக்கும். Noctilien network பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறும். ட்ராம் சேவைகளில் தடங்கல்கள் காணப்படும். இது தொடர்பான மேலதிக விவரங்களை RATP நிறுவனத்தின் இணையத் தளத்தில் (the RATP website) அறிந்துகொள்ள முடியும்.
பொதுப்போக்குவரத்துப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஐந்து தொழிற் சங்கங்கள், சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.