ஆங்கிலக் கால்வாய் அகதிகள் விவகாரம்: பாரிஸ்- லண்டன் இடையே உடன்பாடு?

Kumarathasan Karthigesu

எகிப்தில் மக்ரோன் – சுனாக் சந்திப்பை அடுத்துத் தகவல்.

சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வருகின்ற அகதிகளைத் தடுக்கின்ற விவகாரத்தில் லண்டனுக்கும் பாரிஸுக்கும் இடையே புதிய இணக்கப்பாடு ஒன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

எகிப்தில் அதிபர் மக்ரோனுக்கும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக்கிற்கும் இடையே நேற்று இடம்பெற்ற முதல் சந்திப்பை அடுத்து நம்பர் 10, டவுணிங் வீதி பிரதமர் அலுவலகம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இரு தலைவர்களது சந்திப்பின் போது நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்ற படகு அகதிகள் விவகாரம் பேச்சுக்களில் முதலிடம் பிடித்திருந்தது எனச் செய்திகள் வந்துள்ளன.

ஐ. நா. பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மக்ரோனும் ரிஷி சுனாக்கும் தற்சமயம் எகிப்தின் ஷாம் எல்-ஷெய்க் நகரில் (Sharm el-Sheikh) தங்கியிருக்கின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை சுமார் 40 ஆயிரம் படகு அகதிகள் பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர். ஆங்கிலக் கால்வாய் தாண்டும் குடியேறிகள் ஏற்படுத்தும் இந்த நெருக்கடி (Channel migrant crisis) லண்டன் அரசியலில் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்துவதுடன் பிரான்ஸுடனான உறவுகளையும் அது பாதித்துவருகிறது. குடியேறிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அதில் பாரிஸின் பங்களிப்பு மிக முக்கியம் ஆகும்.

மக்ரோன் – சுனாக் சந்திப்பிற்குப் பிறகு கருத்து வெளியிட்ட பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர், இரு நாடுகளுக்கும் இடையே புதிய குடியேறிகள் உடன்பாடு ஒன்று எட்டப்படும் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஒரே இரவில் தீர்த்துவிட முடியாத இந்த நெருக்கடியில் உடன்பாடு எட்டப்பட்டாலும் அது இன்னும் பல படிகளைத் தாண்ட வேண்டி இருக்கும் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.