கெர்சன் நகரிலிருந்து படைகள் வாபஸ்! ரஷ்யா உத்தரவு!!

Kumarathasan Karthigesu

தக்க வைப்பது மிகச் சவால் புடினின் ஜெனரல் விளக்கம் போரில் முக்கிய பின்னடைவு.

உக்ரைனின் தென் பகுதியில் கேந்திர முக்கியத்துவம் மிக்க கெர்சன்(Kherson) நகரில் இருந்து வெளியேறுமாறு மொஸ்கோ அதன் படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

போரில் ரஷ்யா கைப்பற்றிய ஒரேயொரு பிராந்தியத் தலைநகரம் கெர்சன் ஆகும். அந்த நகரை ஊடறுத்துச் செல்லுகின்ற நிப்ரோ நதியின் (Dnipro River) மேற்குப் பகுதியில் இருந்தே படைகளை வெளியேறுமாறு ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

கடந்த பல மாதங்களாக ரஷ்யப் படைகளது கட்டுப்பாட்டில் இருந்துவந்த இந்த நகரைத் தொடர்ந்தும் தக்கவைப்பது “மிகச் சிக்கலானது” என்று உக்ரைன் படை நடவடிக்கைகள் அனைத்துக்கும் தலைமை வகிக்கின்ற ரஷ்ய ஜெனரல் செர்ஜி சுரோவிகின் (Sergei Surovikin) தெரிவித்திருக்கிறார்.

கெர்சன் நகருக்கான வழங்கல்களை இனிமேலும் முழுமையாகச் செய்ய முடியாதுள்ளது. நதியின் மேற்குப் பகுதியைப் பாதுகாப்பது என்ற தீர்மானம் எளிதான ஒன்றல்ல. ஆயினும் அங்கிருந்து எங்களால் முடிந்த வரை சிவிலியன்களை வெளியேற்றி விட்டோம். அதேசமயம் நாங்கள் எங்கள் படைவீரர்களது உயிர்களைக் காப்பாற்ற விரும்புகின்றோம் – என்று ஜெனரல் மேலும் கூறியுள்ளார். நதியின் கிழக்குப் பகுதியில் முன்னரங்குகளைப் பலப்படுத்துமாறு தான் பரிந்துரைத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிப்ரோ நதியின் மேற்குப் பக்கமாக உள்ள ரஷ்யப் படை நிலைகள் மீது உக்ரைன் படைகள் கடந்த ஒக்ரோபர் முதல் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தி வந்தன. உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் வழங்கிய ஏவாயுதங்கள் ரஷ்யப் படை நிலைகள் மீது குண்டுகளைப் பொழிந்து தள்ளிவருகின்றன. கடும் சண்டைக்கு மத்தியில் கெர்சன் நகரில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிவிலியன்களை மொஸ்கோ வெளியேற்றியிருந்தது. இந்த நிலையிலேயே அங்கிருந்து படைகளை வெளியேற்றும் முடிவை அது அறிவித்திருக்கிறது.

கடந்த பெப்ரவரியில் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பமான பிறகு ரஷ்யப் படைகள் சந்திக்கின்ற பெரும் பின்னடைவு இது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர். தலைநகர் கீவ் நோக்கிப் பல முனைகளில் முன்னேறி வந்த தனது படைகளைக் கடந்த வசந்த காலப்பகுதியில் ரஷ்யா திடீரெனத் திருப்பி அழைத்திருந்தது. அதனை ஒத்த ஒரு யுத்தப் பின்னடைவே இந்த கெர்சன் நகர வாபஸ் என்று ராணுவ வல்லுநர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

படை வாபஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர் கெர்சன் நகரில் இடம்பெற்ற கார்க் குண்டு வெடிப்பில் நகரின் மொஸ்கோ நிர்வாகத்துக்குப் பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

அதிபர் விளாடிமிர் புடின் கெர்சன் உட்பட உக்ரைனின் முக்கிய சில பகுதிகளைக் கடந்த மாதம் ரஷ்யாவோடு இணைக்கின்ற பிரகடனத்தை வெளியிட்டிருந்தார். தற்போது அதில் ஒரு நகரம் இழக்கப் படுவது குறித்து அவரது கருத்து எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

அதேசமயம் ரஷ்யாவின் படை வாபஸ் நடவடிக்கைகளைத் தாங்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அவதானித்து வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.