தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்க முயற்சிக்கு தமிழ் பிரதிநிதிகளே எதிர்ப்பு: நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு.

144

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு எதிராக ஒரு சில தமிழ் பிரதிநிதிகளே எதிர்ப்பினை வெளியிடுவதை வண்மையாக கண்டிப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ’21 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பிற்கும் நன்றியைத் தெரிவித்ததோடு, அரசமைப்பு பேரவையை  விரைவில் ஸ்தாபிக்க வேண்டும் என்றும்  சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான ஆணையாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும்,இதற்கும் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கடந்த மாத இறுதியில் யாழிலும், கிளிநொச்சியிலும்  இரண்டு நடமாடும் சேவை நிகழ்வுகளை நடத்தியதாகவும், வடமாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலேயே இவற்றை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ள பலருக்கு தேசிய அடையாள அட்டை,  கடவுச்சீட்டு,  கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் இல்லை. எனவே, இந்தப் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் 12 அமைச்சுக்களை ஒன்றிணைந்தே இந்த நடமாடும் சேவை பணியை முன்னெடுத்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர்,இதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் 20 இற்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள் எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சியிலும் தமக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், தமது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செயய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தமக்கு இதன்போது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார் எனவும் குறிப்பிட்டார். தாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த நிலையில் தமது முயற்சியை சீர்குலைக்கும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை நாம் கண்டிக்கிறோம்’ என்றார்.