புலம்பெயர் நாடுகளிலிலுள்ள பல கட்டமைப்புகள், இயக்கங்கள் மக்களைத் தவறாக வழி நடத்தி வருகின்றன: ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் காசி. ஆனந்தன் அறிக்கை.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்த பின் இலங்கை அரசாலும் அதனோடு சேர்ந்தியங்கும் தமிழ் அரசியலாளர்கள் மற்றும் இலங்கை அரச புலனாய்வாளர்களுடன் சேர்ந்தியங்கி வருபவர்களாலும் மக்கள் பல குழப்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் காசி. ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  ஈழ விடுதலைப் போராட்டமானது ஆரம்பத்திலிருந்தே பல்வேறுபட்ட தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு உயர்வு நிலை பெற்ற நிலையில் பல துரோகங்களுக்கும், சதிகளுக்கும் மத்தியில் பலநூறு வெற்றிகளைப் கண்டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.  தனியரசை நடைமுறைப்படுத்தி போரின் நெருக்குவாரங்கள், சண்டைகள் நடந்த போதும் ஈழமக்கள் சுதந்திரமான மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.

விடுதலைப் போராட்டத்தின் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் மக்கள் பற்றுக் கொண்டிருந்தார்கள் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.ஆனால் 2009 மே இறுதிப் போரின் பின்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்த பின் இலங்கை அரசாலும் அதனோடு சேர்ந்தியங்கும் தமிழ் அரசியலாளர்கள் மற்றும் இலங்கை அரச புலனாய்வாளர்களுடன் சேர்ந்தியங்கி வருபவர்களாலும் மக்கள் பல குழப்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஈழ நிலம் கடந்து புலம்பெயர் நாடுகளிலும் பல கட்டமைப்புகள்இ இயக்கங்கள் மக்களைத் தவறாக வழி நடத்திக் குழப்பங்களைத் தோற்றுவித்து வருகின்றன. வருடத்துக்கொன்று, மாதத்துக்கொன்று என புதிய புதிய அமைப்புகள் உருவாகி வருகின்றமை இனத்தின் பலம், ஆற்றல் சிந்தனை சிதைவடைந்து தமிழீழ விடுதலை கனவாகிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்pட்டுள்ளார்.

தங்களைத் தாங்களே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களாகவும் தாங்கள் மட்டுமே விடுதலைப் புலிகளாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டு இலங்கை மற்றும் புலம்பெயர் நாட்டு உளவுப் பிரிவுகளுடன் சேர்ந்தியங்கியபடி விடுதலைப் புலிகள் அமைப்பு கொண்டிருந்த கொள்கையையும் போராட்டத்தையும் களங்கப் படுத்துபவர்களைக் காணக் கூடியதாகவுள்ளது என தெரிவித்த அவர் விடுதலைப்புலிகள் என்று பெயரைக் கூறிக்கொண்டு போதைப் பொருள் வியாபாரம், அமைப்புக்கெதிரான துரோக செயற்பாடுகள் அவர்களின் மரபுக்கொவ்வாத செயல்கள் எனப் பல தவறான செயற்பாடுகளைச் செய்து வருவது வருத்தமளிப்பதாய் உள்ளது’ என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.