செவ்வாய்க் கோளில் விண்கல் மோதிப் பெரும் வெடிப்பு! பனிக் கட்டிகள் தெறிப்பு!!

நாசா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

செவ்வாய்க் கிரகத்தில் நிகழ்ந்துள்ள பெரும் அதிர்வு பற்றிய முக்கிய அறிவிப்பை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய நாசா (Nasa) நேற்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கிறது. விண்கல் ஒன்று மோதியதால் நிகழ்ந்ததாக கூறப்படும் பெரும் நில அதிர்வை அடுத்து எடுக்கப்பட்ட படங்கள் செவ்வாயின் பூமத்திய ரேகைப் (equator) பகுதியில் புதிதாகப் பெரும் பள்ளத்தாக்கு ஒன்று உருவாகி இருப்பதையும் உள்ளே இருந்து பனிக் கட்டிப் பாறைகள் தரைக்கு வெளியே சிதறி வீசப்பட்டுக் கிடப்பதையும் காட்டுகின்றன என்று நாசா அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு டிசெம்பர் 24 ஆம் திகதி செவ்வாயில் இந்த விண் கல் மோதல் இடம்பெற்றுள்ளது. செவ்வாயின் தரை ஆழத்தில் நில அதிர்வுகள் மற்றும் அசைவுகளை ஆய்வு செய்து வருகின்ற “இன்சைட்” என்ற கலமும் (InSight landing module) செவ்வாயின் புவியியல்தோற்றம், காலநிலை தொடர்பான ஆய்வுகளில் கடந்த 16 ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் “Mars Reconnaissance Orbiter” செயற்கைக் கோளும் அனுப்பிய தரவுகள், படங்கள் மூலமே அங்கு நிகழ்ந்துள்ள இந்தப் பெரும் அதிர்வு பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன.

பூமி அதிர்வு போன்று செவ்வாயில் நில அதிர்வுகள் (Marsquake) அடிக்கடிப் பதிவாகுவது வழமை என்றாலும் அங்கு மனித ஆராய்ச்சிகள் தொடங்கிய பிறகு நிகழ்ந்துள்ள பெரும் அதிர்வு இது என்று நாசா பதிவு செய்துள்ளது. விண் பாறை மோதிய இடத்தில் சுமார் 150 மீற்றர்கள் அகலமும் 21 மீற்றர் ஆழமும் கொண்ட பெரும் பள்ளத்தாக்கு உருவாக்கியிருப்பதாக நாசா மதிப்பிட்டுள்ளது. தரையின் உள்ளே இருந்து தெறித்துப் பறந்துள்ள பொருள்களில் வெண் நிறத்தில் பனிக்கட்டிப் பாறைகளும் நாசா வெளியிட்ட படங்களில் காணப்படுகின்றன. அதிக வெப்பம்

நிலவுகின்ற துருவ – பூமத்திய ரேகைப் பகுதியில் தரையின் ஆழத்தில் இருந்து பனிக் கட்டிகள் வெளிவந்திருப்பது செவ்வாய்க் கோளின் தரைத் தோற்றம், காலநிலை தொடர்பான மர்மங்களில் இதுவரை அறியப்படாத பல புதிய தகவல்களை வெளிக்கொண்டுவர உதவும் என்று நம்பப்படுகிறது.

மிகுந்த வெப்பமான பகுதியில் பனிக் கட்டி கண்டறியப்பட்டிருப்பது “ஆச்சரியம்” அளிக்கிறது என்றும் அது செவ்வாயின் தரையமைப்பு பற்றிய ஆழமான ஆராய்ச்சிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் நாசா அறிவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பனிக் கட்டி தண்ணீராகவும் ஒக்சிஜனாக(oxygen) அல்லது ஹைட்ரஜனாகவும் (hydrogen) மாற்றப்படக் கூடியது என்பதால் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேரில் சென்று இறங்குவதற்கான முயற்சியில் இது முக்கியமான கண்டுபிடிப்பு என மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.