லிஸ் ட்ரஸ்ஸுக்கும் 1, 15 000 பவுண்ட்ஸ் கிடைக்கும்!
Kumarathasan Karthigesu
முன்னாள் பிரதமர்களுக்கான நிதிச் சலுகை மீது விமர்சனம்.
பிரிட்டனில் பதவியில் இருந்த முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ் நாள் நிதிச் சலுகைகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. Public Duty Costs Allowance (PDCA) எனப்படும் பொதுப் பணிச் சேவைக்கான செலவுக் கொடுப்பனவாக முன்னாள் பிரதமர் ஒருவர் வருடாந்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பவுண்ட்ஸ் நிதியைப் பெற உரித்துடையவராகிறார். பத்து ஆண்டுகள் பதவியில் இருந்த ரொனி பிளேயர், 11 ஆண்டுகள் பதவியில் இருந்த மார்க்கிரேட் தட்சர் அம்மையார் போன்றோருக்குக் கிடைத்த அதே நிதிச் சலுகையை ஆக 44 நாட்கள் மட்டுமே பதவி வகித்துவிட்டு வெளியேறியுள்ள லிஸ் ட்ரஸ் அம்மையாரும் பெற்றுக் கொள்ள உரித்துடையவர் ஆகிறார்.
அதேசமயம் இந்தத் தொகைக்குப் புறம்பாக இதே தொகையில் பத்து சதவீதத்தை ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பும் உள்ளது. அவற்றை அவர் பெற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.
ஆனால் முன்னாள் பிரதமர் ஒருவர் இந்த நிதிக் கொடுப்பனவை முழுமையாக அனுபவிக்கவேண்டியவரல்லர். அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் வேண்டுமானால் அதை ஏற்காதிருக்கவோ அல்லது நிதியில் ஒரு பங்கை மாத்திரம் பெற்றுக்கொள்ளவோ முடியும்.
45 நாட்கள் மட்டுமே பதவி வகித்த லிஸ் ட்ரஸ் அம்மையார் மக்கள் சேவைக்கான இந்த நிதியை அனுபவிக்கத் தகுதியற்றவர் என்று பிரதான எதிர்க் கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் கூறியிருக்கிறார்.
நாடு பெரும் பொருளாதார – நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பவுண்ட்ஸ் நாணயப் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பண வீக்கத்தின் விளைவுகள் நாட்டின் ஒவ்வொரு குடி மக்களையும் பாதித்துள்ளது. இந்த நிலையில் ஆறு ஆண்டுகளில் நான்கு பிரதமர்கள் பதவிக்கு வந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு முன்னாள் பிரதமர்களுக்கான நிதிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.அவ்வாறான அரசியல் போக்கைக் கடுமையாக விமர்சிக்கின்ற கருத்துக்கள் நாட்டில் எழுந்துள்ளன.”நம்பர் 10, டவுணிங் வீதி இல்லம் என்ன குறுகிய காலம் தங்கிச் சலுகைகளை அனுபவித்துச் செல்லும் விடுமுறைக்கால வீடா? “என்றவாறும் பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
முன்னாள் பிரதமர்களில் ரொனி பிளேயர், ஜோன் மேயர் இருவரும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும், கோர்டன் பிறவுண் ஒரு லட்சத்துப் 14 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும் டேவிற் கமரோன்
ஒரு லட்சத்துப் 13 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும் திரேசா மே அம்மையார் இதுவரை 57 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும் பொதுப் பணிச் சேவைக்கான நிதியாகப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்ற தகவலை பிரிட்டிஷ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.