எலெக்றிக் கார் மின்னேற்றும் மையங்கள் ஜேர்மனி முழுவதும் விஸ்தரிப்பு.

Kumarathasan Karthigesu

 

6 பில்லியன் ஈரோ செலவில் ஒரு மில்லியன் நிலைகளை நிறுவ அரசு பெரும் திட்டம்.

ஐரோப்பா முழுவதும் எலெக்றிக் கார் பாவனை அதிகரித்து வருகிறது. ஆனால் அவற்றின் பற்றரிகளை சார்ஜ் செய்வதற்கான நிலையங்கள் இன்னமும் பரந்த அளவில் விரிவு படுத்தப்படவில்லை. ஜேர்மனி 2030 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் பத்து லட்சம் மின்னேற்றும் நிலையங்களை ஆறு பில்லியன் ஈரோக்கள் நிதிச் செலவில் நிறுவுவதற்கான பெரும் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது.

நாடெங்கும் தற்சமயம் இயங்கும் மின்னேற்றும் நிலைகளின் எண்ணிக்கை 70 ஆயிரமாகும். பெற்றோலிய எரிபொருளில் இயங்குகின்ற கார்களைத் தவிர்த்து மின்சாரக் கார்களை வாங்குவதை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் கார்களுக்கு மின்னேற்றும் வலை அமைப்பை(charging network for electric cars) விஸ்தரிப்பதற்கான பெரும் திட்டம் (“master plan”) தீட்டப்பட்டுள்ளது என்று ஜேர்மனியின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருக்கிறார். போக்குவரத்துத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றுச் சூழலைப் பேணுகின்ற இலக்குடன் இணைந்ததாக இந்தத் திட்டம் இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதேவேளை, பிரான்ஸின் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் எலெக்றிக் கார்களை மாற்றிக் கொள்வதற்கான நிதி உதவியை 7 ஆயிரம் ஈரோக்கள் வரை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.கடந்த திங்களன்று பாரிஸில் உலகக் கார்க் கண்காட்சியை (Mondial de l’Automobile) ஆரம்பித்து வைத்த நிகழ்வில் அதிபர் மக்ரோன் இத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் சுமார் ஒரு லட்சம் எலெக்றிக் கார்களை 100 ஈரோக்கள் மாதாந்தக் கட்டணத்தில் வழங்கும் திட்டம் குறித்தும் அவர் அச்சமயம் அறிவித்தார். தற்சமயம் எரிபொருள்களுக்கு வழங்கப்படுகின்ற அரச மானியம் போன்று கார்களுக்கு மின்னேற்றும் கட்டணத்திலும் ஒரு பகுதியை அரசு பொறுப்பேற்கும் என்றும் மக்ரோன் தெரிவித்தார்.