T20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று  தொடங்கியது . பேர்த் விளையாட்டரங்கில்  சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது.

ஓட்டங்களைப் பெறுவதில் ஆரம்பம் முதல் சிரமத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் 14 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று   ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. கடைசி 6 ஓவர்களில் ஓட்டங்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் ஓட்டங்களுக்கு பதிலாக விக்கெட்கள் சரிந்தன.

இப்ராஹிம் ஸ்த்ரான் (32), உஸ்மான் கானி (30) ஆகிய இருவரே திறமையாக துடுப்பெடுத்தாடினர்.ஏனையவர்களில் நஜிபுல்லா ஸத்ரான் (13), ரஹ்மானுல்லா குர்பாஸ் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சாம் கரன் 3.4 ஓவர்கள் பந்துவீசி 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த பந்துவீச்சுப் பெறுதி இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக பதிவானது. அத்துடன் சாம் கரனின் அதிசிறந்த தனிப்பட்ட பந்துவீச்சு பெறுதியாகவும் அமைந்தது.

அவரை விட பென் ஸ்டோக்ஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க் வூட் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சுமாரான மொத்த எண்ணிக்கையான 113 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 18.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்தும் மந்தகதியிலேயே ஓட்டங்களைப் பெற்றது.

லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 19 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜொஸ் பட்லர், டேவிட் மாலன் ஆகிய இருவரும் தலா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆப்கன் பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி, முஜீப் உர் ரஹ்மான், ராஷித் கான், பரீத் அஹ்மத், மொஹமத் நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.