நீதியை நிலைநாட்டாமல் பணத்தை வழங்கும் அரசுக்கு கொழும்பில் தமிழ் தாய்மார் சவால்
இலங்கையில் நீண்டகாலப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் தாய்மார்கள், 13 வருடங்களுக்கு முன்னர் தமது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட கதியை வெளிக்காட்டாமல் பணத்தைச் செலுத்தி பொறுப்பில் இருந்து தப்பிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து தலைநகரில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
காணாமல் போன ஒருவருக்கு இரண்டு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க அமைச்சரவை தீர்மானித்தமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் தமிழ் தாய்மார்கள், தனது தொடர் போராட்டத்தின் 2066வது நாளான இன்று, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன ஆனது எக்பதை அறிய சர்வதேச தலையீட்டை கோரி மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
ஒருவர் காணவில்லை என உறுதி செய்யப்பட்டால், காணாமல் போனமைக்கான சான்றிதழைப் பெறுவதற்கான தேவையை நீக்கவும், முன்னர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவை இரண்டு இலட்சமாக அதிகரிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த தொகை தமது போராட்டத்தை முறியடிக்க கொடுக்கப்படும் இலஞ்சம் என பணத்தை உறவினர்கள் கடுமையாக மறுக்கின்றனர்.
“எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? எங்கள் பிள்ளைகளுக்கு என்ன ஆனது? எங்களுக்கு பணம் வேண்டாம். நாங்கள் தருகின்றோம். நாங்கள் ஐந்து இலட்சம் தருகிறோம். எங்களுக்கு உங்களிடமிருந்து இரண்டு இலட்சம் தேவையில்லை. எங்கள் பிள்ளைகளின் எலும்புகளையாவது காட்டுங்கள். இரண்டில் ஒரு முடிவு வரவேண்டும் என இறுதியாக வலியுறுத்துகின்றோம்.” என போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தாய் ஒருவர் கண்ணீருடன் சிங்களத்தில் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 150ற்கும் மேற்பட்டோர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பதாதைகளையும், தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக தலைநகரில் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மற்றும் பல தூதரகங்களிலும் தமிழ் தாய்மார்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்ததாக எமது செய்தியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தின் பிள்ளைகளின் உயிரின் பெறுமதியை இரண்டு இலட்சம் ரூபாவாக மதிப்பிடும் திட்டத்தை நிராகரித்து, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி நீதிக்கான போராட்டத்தை பணத்தை கொடுத்து அழிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
`எங்கள் பிள்ளைகளின் பெறுமதி இரண்டு இலட்சம் ரூபாயா? நாங்கள் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தவர்கள், வீடுகளுக்கு வந்து கண்ணெதிரே அழைத்துச் செல்லப்பட்டவர்கள், வெள்ளை வேனில் வந்து கடத்திச் செல்லப்பட்டவர்கள், கடலில் கைது செய்யப்பட்டவர்கள், பிள்ளைகளுக்கு சாட்சியாளர்களாக இருந்துகொண்டு அவர்களைத் தேடுகின்றோம். பணத்தைக் கொடுத்து எமது நீதிக்கான போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது,” என முல்லைத்தீவு ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
“இலங்கை தொடர்பாக ஜெனீவாவில் மனித உரிமைகள் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறைக்கவே இந்த இரண்டு இலட்சங்களை எங்களிடம் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள். போராட்டத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எமது தொடர் போராட்டத்தை முறியடிக்க நினைத்து நட்டஈடு செலுத்த ஆரம்பித்தார். மன்னிக்கவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் சேர்ந்து எம்மை ஏமாற்றி நாடகமாடுகின்றார்.” என அவர் குறிப்பிட்டார்.
13 வருடங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தாய்மார்கள் தமது அன்புக்குரியவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தக் கோரி முன்னெடுக்கும் போராட்டம் 2050 நாட்களைக் கடந்துள்ளது.
போரின் இறுதி நாட்களில் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த பின்னர் மற்றும்
போரின் இறுதித் தருணங்களில் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன ஆனது என்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
காணாமல் போனோர் அலுவலகம் (OMP) 2018 பெப்ரவரி 28 ஆம் திகதி மைத்திரி ரணில் தலைமையிலான அரசாங்கத்தினால் அவர்களின் தலைவிதியைக் கண்டறிய ஸ்தாபிக்கப்பட்டது, ஆனால் அந்த அலுவலகத்தால் உறவினர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்போதைய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியை வகிக்கும் OMP அலுவலகத்தின் ஸ்தாபகத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலி பீரிஸ் கூறியது போன்று யுத்தத்தின் போது குறைந்தது இருபதாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.