மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிப்பு

தேர்தல் ஒன்றை நடத்தி மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.  குறைந்த வருமானத்தை பெறும் நாடாக இலங்கையை மாற்றிய அனைவரும் தங்களதுப் பதவிகளில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை இரத்தாகியுள்ளது. எனவே, மக்கள் ஆணையை மீள கோர வேண்டும். தேர்தலைக் காலந்தாழ்த்தினால் என்ன நடக்கும் என மக்கள் பாடமெடுத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

உரிய தினத்தில் தேர்தலை நடத்தாவிட்டால் அதற்கு எதிராக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வௌியிலும் போராட்டங்களை மேற்கொள்ளவும், சர்வதேசத்துக்கு செல்லவும் எதிர்க்கட்சிகள் கூட்டாகத் தீர்மானித்தள்ளன என்றார்.