பால், முட்டை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்.

விலங்கு தீவனம் பற்றாக்குறையினால் பால் மற்றும் முட்டை,கோழி இறைச்சி தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் பால்,முட்டை ஆகியவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பேராதனை விலங்கு உணவு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கோழி மற்றும் இறைச்சி உற்பத்தியில் நாடு தன்னிறைவடைந்திருந்தது. இருப்பினும் தற்போது அந்த தொழிற்துறை முழுமையாக வீழ்ச்சியடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

விலங்கு மற்றும் கோழிகளுக்கான தீவன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதால் மோசமான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

குட கடந்த காலங்களில் மாதம் 80,000ஆயிரம் கோழிகள் சந்தைக்கு விநியோகிக்கப்படும்,ஆனால் தற்போது 10,000ஆயிரம் கோழிகள் மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பால் பொது மக்கள் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதையும் மட்டுப்படுத்தியுள்ளார்கள்.

விலங்கு தீவனம் பற்றாக்குறையினால் பால் மற்றும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.எதிர்வரும் நாட்களில் பால்,முட்டை ஆகியவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும்.

இந்த தொழிற்துறையின் தற்போது நிலைமை கவலைக்குரியது.கோழி மற்றும் பால் உற்பத்தி தொழிற்துறையை மேம்படுத்த போதுமான மானியத்தை ஒதுக்கி தருமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.