காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்?

ராகுல் காந்தி நாடு தழுவிய பாரத் ஜோடோ யாத்திரை  வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ராகுல் காந்தியே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று 2019ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பில் உள்ளார்.கட்சிக்கு நிரந்தரமாக செயல்புரியம் தலைவர் தேவை என கட்சியின் முன்னணி தலைவர்கள் ஜி-23 என்ற குழுவாக இருந்து தொடர் அழுத்தத்தை காந்தி குடும்பத்திற்கு முன்வைத்து வந்தனர்.

தொடர்ந்து கட்சியின் தலைமை பொறுப்பாக தேர்தல் தேதியை கட்சி வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் வரும் 24ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கொள்ளலாம். தேர்தல் நடத்துவதற்கான தேவை ஏற்படும் என்றால், அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படும்.

இந்நிலையில், ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என பேச்சு அடிபடத் தொடங்கியது.

மாநிலத்தில் இளம் தலைவரான சச்சின் பைலட்டை முதலமைச்சராக்கி, கெலாட்டை டெல்லி அரசியலுக்கு கொண்டு வர கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைவருக்கான போட்டியில் ராகுல் காந்தி இல்லாதபட்சத்தில் அசோக் கெலாட் களத்திற்கு வருவார் எனக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டிற்கு விட்டுவிட்டு வரவும் அசோக் கெலாட்டிற்கு மனமில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த பின்னணியில் தான் மற்றொரு திருப்பமாக சசி தரூர் பெயரும் தலைவர் பதவி ரேஸில் அடிபடத் தொடங்கியுள்ளது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக டெல்லியில் சோனியா காந்தியை சசி தரூர் நேற்று சந்தித்து பேசியுள்ளார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட சோனிய காந்தி சசி தரூருக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அடுத்த தலைவர் போட்டியில் அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் ஆகியோர் மோத உள்ளார்களா அல்லது ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக போகிறாரா என காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது.