குளிப்பதற்காக கடற்கரைக்கு சென்ற இளைஞன் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுகாணாமல் போயுள்ளான்.

நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரை பகுதியில் குளிப்பதற்காக சென்ற 26 வயது உடைய இளைஞர் ஒருவர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

தெனியாய பிரதேசத்தை சேர்ந்த வேலவன் ரவீந்திர குமார் என்ற  இளைஞர் நீர்கொழும்பு கதிரானை பிரதேசத்தில் உள்ள கட்டிட நிர்மாணம் இடம்பெற்று வரும் இடம் ஒன்றில்  தொழில் செய்து வருபவராவார்.

நண்பர்களுடன் நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரை பிரதேசத்தில் குளிக்க வந்த போது திடீரென்று அலைகளால் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இதேவேளை இன்று காலை முதல் கடற்படையின் சுழியோடிகள், நீர்கொழும்பு உயிர் காப்பு சேவை பொலிசார் ஆகியோர் இணைந்து சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள கற்பாறைகளுக்கு இடையில் சடலம் ஒதுங்கவில்லை என்பதால் மாலை அளவில் சடலம் கரை ஒதுங்கலாம் என கடற்படையினர் தெரிவித்தனர்.

சம்பவம் இடம் பெற்ற கடல் பகுதி குளிப்பதற்கு பாதுகாப்பான இடமில்லை எனவும் இங்கு பல மரணங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் பிரதேசவாசிகளும் பொலிசாரும் தெரிவித்தனர்

தெனியாய பிரதேசத்தில் இருந்து வந்த இளைஞனின் நண்பர்கள், உறவினர்கள், அவரோடு தொழில் செய்த சக ஊழியர்கள் ஆகியோர்  சடலம் கரை ஒதுக்கும் வரை  தற்போது காத்து நிற்கின்றனர்.