வாகன அணி விபத்தில் காயமின்றித் தப்பினார் ஷெலென்ஸ்கி!

Kumarathasan Karthigesu

உக்ரைன் நாட்டின் அதிபர் ஷெலென்ஸ்கி பயணம் செய்த வாகன அணி மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

புதன்-வியாழன் இரவுப் பொழுதில் தலைநகர் கீவ்வில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அதிபர் காயம் எதுவும் இன்றித் தப்பி விட்டார் என்று அவரது பேச்சாளர் செர்ஜி நைகிஃபோரோவ் (Sergii Nykyforov) ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். மோதிய காரின் சாரதி காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிபர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து எவ்வாறான சூழ்நிலையில் நிகழ்ந்தது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் வட கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கார்கீவ் பிராந்தியத்தில் (Kharkiv region) ரஷ்யப்படைகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும் எதிர்த் தாக்குதல் ஒன்றை நடத்திய உக்ரைன் படைகள் பெரியளவு நிலப் பிரதேசத்தை மீட்டுள்ளன. ரஷ்யா தனது படைகளை அங்கிருந்து திருப்பி அழைத்துவருகிறது. தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக அதிபர் ஷெலென்ஸ்கி நேற்று அங்கு விஜயம் செய்திருந்தார். அங்கிருந்து திரும்பிய வழியிலேயே அவரது வாகன அணி மீது கார் மோதிய சம்பவம் இடம்பெற்றிருக்கிறது என்று சில தகவல்கள் தெரிவித்தன. விபத்து நடந்த பின்னர் அதிபரின் வழக்கமான நாளாந்த உரையை ரெலிகிராம் (Telegram) ஊடகம் வெளியிட்டது.

இதேவேளை, உக்ரைனில் நீர்த்தேக்கம் ஒன்றின் அணைக்கட்டு ரஷ்யப் படைகளின் தாக்குதலில் சேதமடைந்ததை அடுத்து சில இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிபர் ஷெலென்ஸ்கியின் பிறப்பிடமாகிய Kryvyi Rih என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த அணைக்கட்டில் இருந்து பெருமளவு நீர் பாய்ந்து வெளியேறுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுவருகின்றனர்.

நீர்த் தேக்கம் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ள அதிபர் ஷெலென்ஸ்கி போரில் தோல்வியைச் சந்தித்துள்ள ரஷ்யப் பயங்கரவாத ஆட்சி பொதுமக்கள் இலக்கு மீது நடத்திய ஒரு கீழ்த்தரமான தாக்குதல் என்று அதனைக் குறிப்பிட்டுள்ளார்.