“மக்களுக்கு சேவை வழங்காத அமைச்சுக்கு இராஜாங்க அமைச்சு எதற்கு? ” ஆனந்த பாலித
- வீடியோ இணைப்பு -
இலங்கை மக்களுக்குத் தேவையான எரிபொருளையோ மின்சாரத்தையோ வழங்க முடியாத மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிற்கு இராஜாங்க அமைச்சு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கையின் சிரேஷ்ட தொழிங்சங்கத் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித, அமைச்சருக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டாலும் மக்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிற்குத் தேவையானா எரிபொருளில் நூற்றுக்கு 50 வீதம் கூட வழங்க முடியாத பெற்றோலிக் கூட்டுத்தாபனம் மற்றும் நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை சரியாக வழங்க முடியாத மின்சார சபைக்கும் இராஜாங்க அமைச்சு நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் எதுவும் இடம்பெறவில்லை. ஏதாவது இடம்பெறுமென நாங்களும் பார்த்துக்கொண்டிருந்தோம். இந்த நிமிடம் வரை மின்சாரம் மற்றும் எரிபொருள் தெடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை. இன்று மின்சாரத்திற்கு பொறுப்பான அமைச்சர் ட்விட்டர் அமைச்சராக மாறியுள்ளார். போராட்டத்தால் பிரதமராகவும், நிதியமைச்சராகவும், ஜனாதிபதியாகவும் நியமனத்தை பெற்றவரால் இன்று எரிபொருள் மோசடி மற்றும் ஊழலை நிறுத்த முடியாமல் போயுள்ளது. இன்று எம்மிடம் காணப்படும் குறிப்பிட்ட சில டொலர்களையும் கொள்ளையடிக்கின்றனர். என்றார்.
தற்போது கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணத்தை செலுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முடிந்தால் தெளிவுபடுத்துமாறு துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரிடம் தான் சவால் விடுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித மேலும் தெரிவித்துள்ளார்.