‘இலங்கை மீதான சர்வதேச அழுத்தத்தை தடுக்க முடியாது’ அருட்தந்தை ரொஹான் சில்வா
பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரையில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தத்தை தடுக்க முடியாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட சமூக மற்றும் சமாதான நிலையத்தின் தலைவர் அருட்தந்தை ரொஹான் சில்வா, பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஜனநாயக போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி அடக்குமுறையை தொடர வேண்டுமெனின் அரசுக்கு பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்த ஒரு குழு அவசியமாகின்றது. அதுவே இன்று இடம்பெறுவதாகவே நாம் நினைக்கின்றோம். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சார்பில் களத்தில் நின்றவர்கள் மீது இன்று பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. அவ்வாறு முத்திரைக் குத்தினால் அவர்களை கைது செய்து அடக்குமுறையை முன்னெடுக்கின்றனர். இந்த சட்டம் இந்த நாட்டுக்கு அவசியமா? இந்த சட்டம் இந்த நாட்டில் நடைமுறையில் இருக்கும்வரை இந்த அடக்குமுறை தொடரும். ஆகவே பொறுப்பான மக்களாக, இந்த நாட்டிற்கு அவசியமற்ற, நாட்டில் அவசியமான விடயங்களுக்காக குரல் கொடுப்பதை தடுக்கின்ற இந்த சட்டத்தை தயவு செய்து மீளப்பெறுங்கள். இது நடைமுறையில் இருக்கும் வரை சர்வதேசத்தின் எம்மீதான அழுத்தத்தை தடுக்க முடியாது. இந்த அடக்குமுறையை முழு சர்வதேசமும் பார்க்கின்ற ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தும். வடக்கு, தெற்கு என நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் இளைஞர்கள் இந்த சட்டத்தினால் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.என்றார்.
ஜனநாயகப் போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென, மூக மற்றும் சமாதான நிலையத்தின் தலைவர் அருட்தந்தை ரொஹான் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.