தமிழ் தரப்பினரது ஒன்றிணைந்த கோரிக்கையை கனத்தில் கொண்டது ஐநா: சுரேந்திரன் குருசுவாமி நம்பிக்கை
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில், ஒருமித்த நிலையில் தமிழ் தரப்பினர் அறிக்கை சமர்ப்பித்ததை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் முன்வைத்த பல விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் சுரேந்திரன் குருசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம், காணி அபகரிப்பு, ஊடகவியலாளர் மீதான தாக்குதல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல விடயங்கள் மனித உரிமைகள் பேரவையில் உள்வாங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபை என்பது ஒரு சிலருக்கோ, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ மாத்திரம் சொந்தமானது அல்ல எனவும் பாதிக்கப்பட்டவர்களுடைய குரலுக்கே செவிசாய்க்கும் எனவும் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.மனித உரிமைகள் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகள் சர்வதேச நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளை பாரப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தமிழ் தரப்பினரதும் ஒன்றிணைந்த கோரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.