போராட்டக்காரர்களை அச்சுறுத்தி போராட்டத்தை நிறுத்த முடியாது’ அஜந்தா பெரேரா
அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக போராட்டக்காரர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பதால் அச்சமடையப்போவது இல்லையென தென்னிலங்கையில் சிவில் சமூக செயற்பாட்டாளரும், சூழலியலாளருமான கலாநிதி அஜந்தா பெரேரா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
எவ்வாறான அடக்குமுறைகள் தொடர்ந்தாலும், கைதுகள் விசாரணைகள் இடம்பெற்றாலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடருமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
காரணம் எதுவும் அறிவிக்கப்படாமல் கலாநிதி அஜந்தா பெரேரா குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இதுத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போராட்டத்தில் பங்கேற்ற அன்னையர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார்கள். காரணம் எங்கள் போராட்டம் எமது உள்ளத்தில் காணப்படுகின்றது. அதற்கு காரணம் எதிர்கால எமது சந்ததிக்காக நல்லதொரு நாட்டை விட்டுச் செல்ல வேண்டுமென நாம் நினைக்கின்றோம். தொடர்ச்சியான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு எம்மை அழைத்தார்கள் என்பதற்காக நாம் போாராட்டத்தை கைவிடப்போவது இல்லை. எமது உள்ளத்தில் உள்ள போராட்டம் தொடரும். போராட்டத்தின் ஊடாக உருவான ஜனாதிபதியாலும், பிரதமராலும்கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இதற்காகவா நாம் போராட்டங்களை முன்னெடுத்தோம். பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களை பட்டினிச் சாவில் தள்ளவா 23.3 மில்லியன் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள்? நாங்கள் வருமானத்தை உழைப்பதற்காக இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இருக்கின்ற பணத்தையும் இழந்தே போராட்டத்தில் பங்கேற்றோம். இந்த போராட்டம் தொடரும். என்றார்.
சிவில் சமூக செயற்பாட்டாளரும், சூழலியலாளருமான கலாநிதி அஜந்தா பெரேரா கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.