கனடாவைக் கலக்கிய கத்தி வெட்டுச் சம்பவங்கள்!! இரட்டையர்கள் வெறியாட்டம்!!!

Kumarathasan Karthigesu

கனடாவின் மத்தியில் அமெரிக்க எல்லையோரமாக அமைந்துள்ள சஸ்காட்ச்செவன் (Saskatchewan) மாகாணத்தில் ஞாயிறு இடம்பெற்றிருக்கும் கொடூர தாக்குதல் சம்பவங்கள் முழு நாட்டையுமே உலுக்கியிருக்கின்றன. கார் ஒன்றில் வந்த இருவர் கிராமங்களில் பரவலாகப் பல இடங்களில் எதிர்ப்பட்டவர்களை வெட்டித் தாக்கி வெறியாட்டம் புரிந்துள்ளனர். தாக்குதல் நடந்த கிராமங்களில் ஒன்று கனடாவின் பூர்வீக குடிகள் வசிக்கின்ற பகுதி ஆகும். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாகாணத்தின் James Smith Cree Nation மற்றும் Wheldon ஆகிய கிராமங்களில் 13 க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆபத்தான இரண்டு நபர்கள் பரவலாக மக்களை இலக்கு வைத்து கத்தி மற்றும் ஆயுதங்களால் பெரும் வெறியாட்டம் நடத்தியுள்ளனர் என்று கனடா பொலிஸ் தெரிவித்திருக்கிறது.

ஆயுதங்களோடு தலைமறைவாகியுள்ள இருவரையும் தேடிப்பிடிப்பதற்காக தாக்குதல் நடந்த பகுதிகள் முழுவதும் அவசர காலநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வீதிகளில் சோதனை நிலைகளை அமைத்துப் பயணிகள் சோதனையிடப்பட்டு வருகின்றனர்.

றோயல் கனெடியன் பொலீஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி (Royal Canadian Mounted Police – RCMP)30,31 வயதுகள் உடைய டாமியன் சாண்டர்சன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் ( Damien Sanderson – Myles Sanderson) என்ற பெயர்களையுடைய இருவரே தாக்குதல்களை நடத்திப் பொதுமக்களைக் கொன்றுள்ளனர். இருவரும் சகோதரர்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

தாக்குதல் தொடர்பான முதல் தொலைபேசி அழைப்பு ஞாயிறு காலை 05.45 மணிக்கு தங்களுக்குக் கிடைத்தது என்றும் தொடர்ந்து வேறு பல இடங்களில் இருந்தும் அவசர உதவி கோரும் அழைப்புகள் வரத் தொடங்கின எனவும் பொலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் நடந்திருக்கின்ற மிகப் பெரும் வன்முறைச் சம்பவமாகப் பதிவாகியிருக்கின்ற இந்தத் தாக்குதல்கள் குறித்துப் பிரதமர் யஸ்ரின் ரூடோ (Justin Trudeau) தனது அதிர்ச்சியையும் மன வேதனையையும் வெளியிட்டுள்ளார்.