யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்-பக்தர்களுக்கு பொலிசாரின் முக்கிய அறிவிப்பு.

வரலாற்றுப் பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கந்தப் பெருமானின் இரதோற்சவம் வெகு விமர்சையாக இன்று(25) நடைபெறுகின்றது.

முத்தமிழால் வையகத்தாரையும் வாழ வைக்கின்ற முருகன் சித்திர தேரிலே அழகுத் திருக்கோலமாக பவனி வருகின்ற காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லையம்பதியில் கூடியிருக்கின்றனர்.

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா  இன்று காலை 6 மணிக்கு வசந்தமண்ட வழிபாட்டுடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில்,தேர்த்திருவிழாவில் பங்கேற்கும் அடியவர்கள் தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த வருடம் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்றது.

எனினும் இம்முறை வழமை போன்று பெருந்திரளான அடியவர்கள் பங்கேற்பர். வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கானோர் நல்லூரானை தரிசிக்க வருகை தந்துள்ளனர். அதனால் திருடர்களின் கைவரிசை அதிமாக இருக்கும்.

அத்துடன், வீட்டில் ஒருவராவது தங்கியிருப்பதுடன் அல்லது பாதுகாப்பாக வீட்டை மூடி ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். வழமைபோன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட்டு அடியவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்கள் தமது தங்க நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இயன்றளவு நகைகளை அணிவதைக் குறைப்பதுடன் பணத்தினை எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும்,பெருமளவு பொலிஸார் உற்சவ காலக்கடமையில் அமர்த்தப்பட்டுள்ள போதும் பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.