பொய்யான குற்றச்சாட்டின் கீழ் தொடரும் அரசின் அடக்குமுறை

பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளரை தொடர்ந்து தடுத்து வைப்பதற்கான சூழ்ச்சி இடம்பெறுவதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளருமான ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான தடுத்து வைப்புகள் ஊடாக இந்த நாட்டின் மாணவர் சமூகத்தையும், தொழிலாளர் வர்க்கத்தையும் மிகத் தீவிரமாக கட்டுப்படுத்தும் அடக்கு முறையை அரசாங்கம் கையாள்வதாக அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் தடுத்து வைக்க முயற்சிக்கும் அபாய நிலைமையை நாம் அவதானிக்கின்றோம். 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்திருப்பதோடு, அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் தொடர்ந்து அவரை தடுத்து வைக்கவே ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர். அராசங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியே அவர் மீது சுமத்தப்படவுள்ள குற்றச்சாட்டு. அவருடம் மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர் மீது இதற்கு ஒத்தாசை புரிந்தததாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அரசாங்கத்தை கவிழ்க்கும் அந்த சூழ்ச்சி என்ன? மில்லியன் கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடியது அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியா? பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த நாட்டின் மாணவர் சமூகத்தையும், தொழிலாளர் வர்க்கத்தையும் மிகத் தீவிரமாக கட்டுப்படுத்தும் அடக்கு முறையை அரசு கையாள்கிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். என்றார்

ஜிஎஸ்பி உள்ளிட்ட சில சர்வதேச ரீதியிலான சலுகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமெனின் மனித உரிமை மீறல்களை நிறுத்துவதோடு பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடான கைதுகளையும் நிறுத்த வேண்டுமென சர்வதேசம் வலியுறுத்தியுள்ள நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இவ்வாறான அடக்குமுறைகளை கையாள்வதாக ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.