தமிழக முதல்வராக பதவி ஏற்கும் விஜய்க்கு மத்திய அரசிடம் இருந்து வந்த முதல் கடிதம்
Meiveli Media Team

மத்திய அரசின் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. புதிய அரசு அமையவுள்ள சூழலில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ.2,152 கோடி கல்வி நிதியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ முழுமையாக அமல்படுத்துவதை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எந்தவிதத் திருத்தங்களும் இன்றி கையெழுத்திடுமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.
கடந்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பி.எம் ஸ்ரீ திட்டத்தில் உள்ள ‘மும்மொழிக் கொள்கை’ தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது எனக் கூறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வந்தது. இதன் காரணமாக, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய சுமார் ரூ.2,152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான புதிய அரசு அமையவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, இத்திட்டத்தில் இணையும் எனத் தில்லி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.நாளை தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்க உள்ள நிலையில், மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைபிடித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதியை அவர் மீட்பாரா அல்லது முந்தைய அரசின் நிலைப்பாட்டையே தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

