திரிஷ்யம் 3 படத்தில் மோகன்லால் ஜோடியாக மீனா.

தமிழ், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா. மீனா, மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்த மலையாள படம் திரிஷ்யம். இப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்று அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது.

பாலியல் தொல்லை கொடுத்த பெண் போலீஸ் அதிகாரி மகனை கொலை செய்த தன்னுடைய மகளை காப்பாற்ற போராடும் தந்தையை பற்றிய கதையாக திரிஷ்யம் படம் உருவாகி இருந்தது. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.75 கோடி வசூல் செய்திருந்தது. திரிஷ்யம் தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது.

இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 2021-ல் மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷ்யம் 2-ம் பாகமும் வெளிவந்தது. இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை படக்குழு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரிஷ்யம் 3 படத்திலும் மோகன்லால் ஜோடியாக மீனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.