நிச்சயமாக இரண்டாவது போராட்ட அலை வரும்:சரத் பொன்சேகா தெரிவிப்பு

கடந்த ஜுலை மாதம் 9ம் திகதி முதலாவது போராட்ட அலை வீசியதாகவும், இரண்டாவது அலை இன்னும் தொடர்வதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் இந்த அடக்குமுறை செயலை நாங்கள் மிகவும் கடுமையாக கண்டிக்கிறோம்.

திருட்டுத்தனமாக ஜனாதிபதி நாற்காலிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி, குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்று நாட்டு மக்களை துன்புறுத்தி, கைது செய்து, சிறைகளில் அடைக்கவே செயற்படுகின்றார்.இந்த ஆட்சியாளர்கள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால், சட்ட பாதுகாப்பிற்கு உள்ள அதிகாரிகள் கூட தர்மசங்கடத்தில் உள்ளனர். இவ்வாறு போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் அதற்கு இடமளிக்க மாட்டோம். கடந்த 9ம் திகதி இளைஞர்கள் அணிவகுத்து நின்றதை தடுக்கும் முயற்சியாகவே இதை பார்க்கிறோம்.

கடந்த மாதம் 9ம் திகதி சுனாமியின் முதல் அலையே வந்தது. இரண்டாவது அலை தற்போது வந்து கொண்டிருக்கிறது. இப்படி அடக்கி நிறுத்தலாம் என்று நினைத்தால் அது மிகவும் தவறான செயல்.
நிச்சயமாக இரண்டாவது அலை வரும், அதன் பின்னர் இந்த ஆட்சியாளர்கள் செல்ல வேண்டிய இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை பார்வையிடுவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.