இந்த வாழ்வு எத்துணை அலாதியானது

- சாம் பிரதீபன் -

இந்த வாழ்வு எத்துணை விசித்திரமானது.

நேற்றையவர்களை தொலைத்துக்கொண்டும்,

நாளையவர்களை

கைகுலுக்கிக் கொண்டும்,

இந்த வாழ்வு எத்துணை வித்தியாசமானது.

சுயங்களை மறைத்துக்கொண்டும்,

போலிகளை விளம்பரப்படுத்திக்கொண்டும்,

இந்த வாழ்வு எத்துணை வில்லங்கமானது.

இன்பங்களை இழந்துகொண்டும்,

கசப்புக்களை உடுத்திக்கொண்டும்,

இந்த வாழ்வு எத்துணை வினோதமானது.

சரிகளை நிராகரித்துக்கொண்டும்,

பிழைகளை அங்கீகரித்துக்கொண்டும்,

இந்த வாழ்வு எத்துணை அங்கலாய்ப்பானது.

புகழ்ச்சிகளின் மேல் முத்தமிட்டுக்கொண்டும்,

விமர்சனங்களின் மேல் காறித் துப்பிக்கொண்டும்,

இந்த வாழ்வு எத்துணை

அருவருப்பானது.

துரோகங்களை அருந்திக்கொண்டும்,

நம்பிக்கைகளில் மலம் கழித்துக்கொண்டும்,

இந்த வாழ்வு எத்துணை

கொடுமையானது.

வாழ்தல்களை பின்தள்ளிக்கொண்டும்,

பணம் செய்தல்களை முன்னிலைப்படுத்திக்கொண்டும்,

இந்த வாழ்வு எத்துணை இரகசியமானது.

குறைகளைப் பூட்டிக்கொண்டும்,

நிறைகளைக் காட்டிக்கொண்டும்,

 

இந்த வாழ்வு எத்துணை பரிகசிப்பானது.

தகுதிகளுக்கு கதவடைத்துக்கொண்டும்,

தம்பட்டங்களுக்கு செங்கம்பளம் விரித்துக்கொண்டும்,

இவற்றினூடும்..

இந்த வாழ்வு எத்துணை அலாதியானது.

புதுமைகளில் பூரித்துக்கொண்டும்,

அக்கணத்தில் வாழ்தல்களை சாதித்துக்கொண்டும்…..