தேசிய விடுதலை என்ற கருதுகோள் அதன் வாழ்வுரிமையின் கிளைகளைப் பறித்துவிட்டு கட்டியெழுப்பப்பட முடியாதது!

- தமிழ் நேசன் -

தமிழ்த் தேசியத்துக்காக மக்கள் ஒன்று கூடும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் மத அடையாளங்களோடு வணக்கத்தலங்கள் அமைந்திருப்பதன் அரசியல் என்ன?

என்ற கேள்வியோடுதான் எம்மில் பலரும் அங்குள்ள தேவாலயத்தையோ அல்லது பிள்ளையார் கோவிலையோ அணுகக்கூடும். ஆனால் தமிழ்த் தேசியம் என்பதும் அது நோக்கிய விடுதலை முழக்கம் என்பதும் வெறும் அரசியல் விடுதலை சார்ந்தது மாத்திரமல்ல என்ற புரிதல் எம்மில் பலரிடமும் இல்லாதிருப்பது ஒரு பலவீனமான அம்சம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

தனித்துவமாக, தனியாக வாழ முனையும் ஒரு தேசியத்துக்கான விடுதலை என்பது, அரசியல் இறைமை என்பதில் பெருமளவு தங்கியிருந்தாலும் அது ஒரு தேசம் உள்ளடக்கிய ஒட்டு மொத்த சமூகத்துக்கான வாழ்வுரிமையை மீட்டெடுத்தல் என்பதிலேயே முழுமையடைகின்றது என்பதை விடுதலை பெற்ற பல சமூகங்களின் வரலாறுகள் நிரூபிக்கின்றன. அந்த வகையில் தமிழ் சமூகத்துக்கான தேசிய விடுதலை என்ற கருதுகோள் அதன் வாழ்வுரிமையின் கிளைகளைப் பறித்துவிட்டு கட்டியெழுப்பப்பட முடியாதது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது இங்கு அவசியமாகின்றது.

வாழ்வுரிமை என்ற பதத்துக்குள் கலாசார, பண்பாட்டு, ஆன்மீக, பொருளாதார, கல்விசார்ந்த, கலை சார்ந்த விசாலமான பரப்பு உள்ளடங்கியிருக்கின்றது. இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பறுந்தவை அல்ல என்பதற்கும்; ஒரு சங்கிலிக் கோர்வை போன்று ஒன்றோடொன்று தொடர்புற்ற பிணைப்பு என்பதற்கும் தமிழர் தொன்மமும் வரலாறும் பல சான்றுகளை எமக்குத் தந்திருக்கினறன. எனவே தான் தமிழர் வாழ்வுரிமையின் ஒரு அம்சமாக தொன்று தொட்டு வழக்கில் இருக்கின்ற ஆன்மீத் தேவைகளுக்கானஒரு அமைவிடமும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்திருக்க வேண்டிய ஒரு தேவையை வெளிப்படுத்தியிருந்தது.

சாதியம் சார்ந்த, கிராமிய வழக்குகள் சார்ந்த, பிராந்திய தனித்துவங்கள் சார்ந்த, வழிபாட்டு முறைமைகள் சார்ந்த பல கட்டமைப்புகளை தன்னகத்தே புழக்கத்தில் கொண்டுள்ள உலகத் தமிழ் சமூகம், ‘தமிழ்’ மொழி என்ற ஒற்றைப் பரிமாணத்தில் ஒன்று கூடும் ஒரு வரலாற்று அமைவிடத்தில் அவர்களுக்கான வாழ்வியல் தேவைகள் அனைத்தையும் அமைத்துக்கொடுக்க எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடே அங்குள்ள ஆன்மீகத் தலங்கள் ஆகும்.

தேசத்துக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நினைவாலயம், முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த எமது மக்களுக்கான முள்ளிவாய்க்கால் நினைவாலயம், தமிழ் மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்கான பிள்ளையார் ஆலயம் மற்றும் புனித அந்தோணியார் தேவாலயம் போன்ற நான்கும் ஒற்றை இடத்தில் ஒருங்கே அமையற்பெற்றிருப்பது அந்த இடத்தின் சிறப்பு என பலரும் கருதிக்கொள்கிறார்கள். இவை மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கான கண்காட்சியகம், நூலகம், ஊடகம், வரலாற்று ஆவணக் காப்பகம், ஒன்றுகூடல் மண்டபம், கவின் கலைகள் பயிலகம் போன்ற பலவும் எதிர்காலத்தில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டுப் பற்றாளர் கிளி அவர்களின் சிந்தனையிலும் அயராத முயற்சியிலும் உருவாக்கப்பட்ட ஆன்மீக வணக்கத்தலத்தின் ஒரு அங்கமே உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் அங்கு அமையப்பெற்றமைக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி அங்குள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

வரலாற்று மையத்துக்கான அத்திவாரம் அமைக்கும் பணிகளுக்காக அங்குள்ள நிலப்பகுதி தோண்டப்பட்டபோது அதன் அடியில் முன்னொரு காலத்தில் பாவனையில் இருந்த இயேசுநாதரின் திருச் சொரூபமொன்று கண்டெடுக்கப்பட்டதாயும் அந்த சொரூபத்தின் அடியில் கல்லறைக் கல்வெட்டு போன்றதொரு விடயம் கண்டெடுக்கப்பட்டமையும் தான் ஒரு தேவாலயத்தை அந்த இடத்தில் அமைக்க உந்துசக்தியாக அமைந்திருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த சொரூபமும் கல்வெட்டும் முன்னெப்போதோ அந்த இடத்தில் இருந்த தேவாலயம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது இந்த இடத்தில் புதைக்கப்பட்ட ஒரு கத்தோலிக்க பாதிரியாரின் கல்லறைக் கல்வெட்டாக இருந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.ஆனால் அது எந்தக் காலப்பகுதியை சேர்ந்தது என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இயேசுநாதரின் திருச்சொரூபம் கண்டெடுக்கப்பட்ட அந்த இடத்தில் ஒரு தேவாலயத்தை அமைப்பது என முடிவாகியபோது எந்தப் புனிதருக்கான தேவாலயமாக அது அமையலாம் என கலந்துரையாடப்பட்டபோது புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்றை அமைக்கலாம் என பெரும்பான்மையோரால் 2015இல் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதிகளவான சைவ மற்றும் இந்து சமய மக்களும் கத்தோலிக்கர்களும் பெரிதும் விரும்புகின்ற விசுவசிக்கின்ற ஒரு காவல் தெய்வமாக புனித அந்தோணியார் இருப்பதால்அங்கு அமையப்பெற்றது தான் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயம் ஆகும்.

லண்டன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஆன்மீகக் குருவாக அப்போதிருந்த அருட்திரு.ஜெபநேசன் அடிகளாரால் திறந்து வைக்கப்பட்டு, புனித அந்தோணியார் பிறந்த இடமான போர்த்துக்கல்லின் லிஸ்பன் நகரில் இருந்து ஆசீர்வதிக்கப்பட்டு எடுத்தவரப்பட்ட புனித அந்தோணியார் திருச்சொரூபத்தை இத் தேவாலயத்தில் வைத்து 2016ம் ஆண்டு முதல் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் புனித அந்தோணியார் ஆலய திருவிழா தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

கொவென்றி, லெஸ்ரர், சௌத்ஹோல், மில்ரன் கெயின்ஸ் ஆகிய நான்கு பங்குத் தலங்களில் உள்ள தமிழக் கத்தோலிக்கர்களும் ஏனைய அனைத்து இடங்களிலுமுள்ள தமிழ் மக்களும் தமக்குரிய உரிமையாக கருதி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை இங்கு கொண்டாடி வருகிறார்கள்.ஆராதனைகள், வழிபாடுகள், திருப்பலி, திருச்சொரூப பவனி, திருச்சொரூப ஆசீர்வாதம், நேர்த்திக் கடன் செலுத்துதல், விருந்துச் சோறு வழங்கல் போன்றன தொடர்ச்சியாக பக்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவிழாக்களின் போது அற்கு வருகைதரும் பக்தர்களுக்கான விருந்தோம்பல்களையும் உணவு சிற்றுண்டி வழங்கும் பொறுப்புக்களையும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நிர்வாகம் நடைமுறைப்படுத்தி வருவதோடு திருவிழாவில் மக்களால் வழங்கப்படும் அன்பளிப்புகளையும் நன்கொடைகளையும் தாயகத்தில் உள்ள சமூகப் பொருளாதார தேசிய வேலைத்திட்டங்களுக்குப் பயன் படுத்தி வருகினறமையும் இங்கு அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இவ்வாண்டுக்கான உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் புனித அந்தோணியார் தேவாலய திருநாள் திருப்பலியும் ஆராதனைகளும் எதிர்வரும் யூன் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் பக்திபூர்வமாக நடைபெற உள்ளது என்றும் அனைத்து பக்தர்களும் திருவிழாவில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் உள்ள ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்படும் பல ஆங்கிலப் பங்குத் தலங்களில் தமிழ்க் கத்தோலிக்கர்கள் உறுபிபினர்களாக இருப்பினும் கூட ஒட்டுமொத்தத் தமிழர்களுக்காக தமிழர்களால் நிர்வகிக்கப்படும் ஒற்றைத் தேவாலயமாக இருக்கும் ஒக்ஸ்போர்ட் புனித அந்தோணியார் தேவாலயம் சிறந்தோங்கவும் திருவிழாவும் ஆராதனைகளும் ஒரு சிறப்பான சமூக ஒன்றுகூடலாகவும் அமையவும் பெருமளவான தமிழ் மக்கள் ஆதரவு காட்டி வருகின்றார்கள்.