ஜேர்மனி ஹம்பேர்க் சூட்டுச் சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!
Kumarathasan Karthigesu
“யெகோவாவின் சாட்சிகள்” பிரார்த்தனை மண்டபத்தில் துப்பாக்கி நபர் வெறியாட்டம்!!
ஜேர்மனியின் ஹம்பேர்க் மாநிலத்தில் நேற்றிரவு துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய வெறியாட்டத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹம்பேர்கின் -அல்ஸ்டர்டார்ஃப் (Alsterdorf)மாவட்டத்தில் அமைந்துள்ள “யெகோவாவின் சாட்சிகள்”(Jehovah’s Witnesses) எனப்படும் மதப் பிரிவினரது பிரார்த்தனை மண்டபம் ஒன்றிலேயே நேற்றிரவு இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு ஒன்பது மணியளவில் மண்டபத்தில் பலர் கூடியிருந்த சமயத்தில் தனியான துப்பாக்கிதாரி ஒருவர் மண்டபத்தினுள் நுழைந்து சுட்டுத் தள்ளியுள்ளார். அந்த நபரும் பின்னர் உயிரைமாய்த்துள்ளார். தாக்குதலாளி யார் அவரது நோக்கம் என்ன என்பன போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என்று பொலீஸார் கூறுகின்றனர். அங்கு காணப்பட்ட ஏழு சடலங்களில் ஒன்று தாக்குதலாளியினுடையதாகஇருக்கலாம் என்று ஜேர்மனிய செய்திஊடகங்கள் தெரிவித்தன.
ஹம்பேர்க்கில் சூட்டுச் சம்பவம் நடந்த கட்டடம் அமைந்துள்ள பகுதி தாக்குதலாளி துப்பாக்கியுடன் தப்பிச் சென்று விட்டதாக முதலில் தகவல் வெளியானது. அதனால் தாக்குதல் நடைபெற்ற “கிங்டொம் மண்டபம்”(Jehovah’s Witnesses Kingdom Hall) அமைந்திருக்கின்ற பிரதேசத்தில் நேற்றிரவு பதற்றம் நிலவியது. வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என்று நகரவாசிகளைப் பொலீஸார் எச்சரித்திருந்தனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட எட்டுப் பேர் அவசர அம்புலன்ஸ் படையினரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சுமார் 17 பேர் பிரார்த்தனை நடந்த மண்டபத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.