நேரில் சந்திக்குமாறு அதிபர் மக்ரோனுக்கு தொழிற்சங்கங்கள் அறைகூவல்!
Kumarathasan Karthigesu
மகளிர் தினமான இன்றும் பாரிஸில் எதிர்ப்பு பேரணி பொதுப் போக்குவரத்துக்கள் இரண்டாம் நாளாகப் பாதிப்பு.
பிரான்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட நாட்டை முடக்கும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் பெரு வெற்றியளித்திருப்பதை அடுத்து அதிபர் மக்ரோன் தங்களை நேரில்சந்திக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளன.
ஒட்டுமொத்த தொழிலாளர் சமூகத்தின் பிரச்சினையை மக்ரோன் “தனது தனிப்பட்ட ஒரு விவகாரம்” போன்று கையாள்கிறார் என்று தொழிற்சங்கத்தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நேற்றைய போராட்டத்தின் முடிவில் தொழிற்சங்கங்களின் கூட்டணி விடுத்த அறிக்கை ஒன்றில், “அரசுத் தலைவரின் மௌனம் தீவிரமான ஒரு ஜனநாயகப் பிரச்சனை” ஆகும் என்று தெரிவித்துள்ளது. ஓய்வூதிய வயது அதிகரிப்புத் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு இன்னமும் அவகாசம் இருக்கிறது என்றும் தொழிற் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை நாடெங்கும் நடைபெற்றுள்ள வீதிப் பேரணிகளில் சுமார் 35 லட்சம் பேர்(3.5 million)கலந்து கொண்டனர் என்று தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.
வரலாற்றில் இடம்பிடித்த பெரும் தொழிலாளர் எதிர்ப்பு நடவடிக்கையாக அது அமைந்தது என்றும் அவை தெரிவித்துள்ளன. உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி நாடு முழுவதும் 12 லட்சம் பேரே (1.28 million) பங்கேற்றனர் என்று அரசு அறிவித்துள்ளது.
பாரிஸ் நகரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பெண்களும் மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றிருந்தனர்.
மகளிர் தினமாகிய இன்று புதன் கிழமையும் பாரிஸ் உட்பட முக்கிய நகரங்களில் வீதிப் பேரணிகள் பல இடம்பெறவுள்ளன.
சுமார் அறுபது வீதமான ஆசிரியர்கள் நேற்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் கல்விச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. அரசின் அனுமதி காரணமாக வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நேற்று வீடுகளில் இருந்து பணியாற்றியதால் நகரங்களில் வாகன நெருக்கடிகள் பெரிதும் குறைந்திருந்தன.எனினும் பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தித் தொழில்களுக்குச் செல்வோர் நேற்று முழுநாளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
நேற்று மார்செய்(Marseille) நகரில் பேரணியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய தீவிர இடதுசாரித்தலைவர் ஜோன் லூக் மெலன்சோன், (Jean-Luc Mélenchon), “ஒருபுறம் அவரது (மக்ரோன்) சொந்த விருப்பம். மறுபுறம் நாட்டின் மக்களது விருப்பம். இதில் இறுதித் தீர்ப்பை யார் கூற வேண்டும்?” -என்று கேள்வி எழுப்பினார்.
ஒரு பொது வாக்கெடுப்பு (“a referendum”) அல்லது நாடாளுமன்றக் கலைப்பு (“a dissolution”) ஏற்பாடு செய்யவேண்டும் அவர் அரசுக்கு அழைப்பு விடுத்தார்.
பிரான்ஸில் ஓய்வூதிய வயதை 62 இல் இருந்து 64 ஆக அதிகரிப்பது உட்பட அரசு அறிமுகம் செய்துள்ள பல சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருவது தெரிந்ததே.