2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும்-அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும் எனவும், விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தங்களின் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்காக நான் சமீபத்தில் ஒரு அதிகரிப்புக்கு அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்து அதற்கான அங்கீகாரத்தைம் பெற்றேன்.

எனினும் குறித்த அதிகரிப்பில் ஆசிரியர்கள் திருப்தி அடையவில்லை. ஆசிரியர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை சரிபார்ப்பதற்காக  தினசரி ஊதியம் 2,000 ரூபாய் போதாது என்று இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.