“ஆபிரிக்காவில் பிரெஞ்சு தலையீட்டின் சகாப்தம் முடிவடைந்து விட்டது..!”
Kumarathasan Karthigesu
வேகமாக சீனா மற்றும் ரஷ்யாவின் செல்வாக்குக்குள் சிக்கி வருகின்ற பிரான்ஸின் முன்னாள் ஆபிரிக்கக் கொலனி நாடுகளில் விஜயம் மேற்கொண்டிருக்கின்ற மக்ரோன், “ஆபிரிக்காவில் பிரெஞ்சுத் தலையீட்டின் சகாப்தம் முடிவடைந்து விட்டதாக” அறிவித்திருக்கிறார்.
அதிபர் எமானுவல் மக்ரோன் பிரான்ஸின் கொலனிகளாக விளங்கிய நான்கு மத்திய ஆபிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். காபோன்(Gabon) அங்கோலா(Angola) கொங்கோ- பிரஸ்ஸாவில்(Congo-Brazzaville) கொங்கோ ஜனநாயகக் குடியரசு (Democratic Republic of Congo)ஆகிய நான்கு நாடுகளில் நான்கு நாள்கள் பயணம் செய்யும் அவர், காபோனில் நடைபெறுகின்ற காடுகளைப் பாதுகாக்கும் “ஒன்றே வனம்” (One Forest) உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
படம் :காபோனில் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாகிய ‘ரபோண்டா வோக்கர் ஆர்போரேற்றம் ‘(Raponda Walker Arboretum) எனப்படும் அடர்ந்த காட்டு நடைபாதையில் மக்ரோன்.
முன்னாள் கொலனிகளாக விளங்கிய ஆபிரிக்க நாடுகளில் பிரான்ஸ் எதிர்ப்புணர்வு அதிகரித்து வருகிறது. அந்த நாடுகளில் சீனா மற்றும் ரஷ்யா இரண்டினதும் செல்வாக்கு ஆழமாக வேரூன்றத் தொடங்கியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே ஆபிரிக்க நாடுகளுடனான பிரான்ஸின் உறவுகளைப் புதுப்பிப்பதற்காக மக்ரோன் அந்த நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கிறார்.
ஆபிரிக்காவில் உள்ள தனது படைகளைப் பிரான்ஸ் வரும் மாதங்களில் குறிப்பிடக் கூடிய அளவுக்குக் குறைத்துக் கொள்ளும் என்று மக்ரோன் தனது இந்த விஜயத்துக்கு முன்பாகக் கடந்த வாரம் அறிவித்திருந்தார். பிரான்ஸ் கடந்த ஆண்டு தனது கொலனி நாடுகளான மாலி (Mali), புர்கினா பாசோ(Burkina Faso) மத்திய ஆபிரிக்கக் குடியரசு (Central African Republic) ஆகியவற்றில் இருந்து தனது துருப்புகளைத் திருப்பி அழைத்திருந்தது.