உள்ளுராட்சிமன்றத் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு வலியுறுத்தல்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை திட்டமிட்ட படி நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பெப்ரல் அமைப்பினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 9ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு உரிய முறையில் முன்னெடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அரச அதிகாரிகள் வெவ்வேறு காரணிகளைக் குறிப்பிட்டு தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து ஒத்துழைக்காமையினால் தேர்தல் நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.இந்த நிலைமை ஜனநாயக நடைமுறைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், எதிர்கால தேர்தல்களில் மோசமான முன்னுதாரணமாகவும் அமையும்.
எனவே அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் தொடர்பிலும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் என பெப்ரல் அமைப்பினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.