உக்ரைன் ஓராண்டு போர் – திருத்தந்தையின் வருத்தமும் வேண்டுகோளும்.

உக்ரேனிய சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

ஓராண்டாக நடந்து கொண்டிருக்கும் இரஷ்யா-உக்ரைன் அறிவற்ற போருக்கு வருத்தம் தெரிவித்து, துன்புறும் உக்ரேனிய மக்களுடன் நெருக்கமாக இருப்போம் என்று வலியுறுத்தி தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவர் 24 வெள்ளிக்கிழமை இரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு முடிவுற்ற  நிலையில் தன் வருத்தத்தைத் தெரிவித்து இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரை நிறுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோமா என்று நம்மை நாம் கேட்டுக் கொள்ளவேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார்.

இடிபாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட அமைதி ஒருபோதும் உண்மையான வெற்றியாக இருக்காது என்று அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் தொடங்கிய நாள் முதல் இன்று வரை எண்ணற்ற முறை தன்னுடைய மறைக்கல்வி உரை, மறையுரை, மூவேளை செப உரை என அனைத்திலும் உக்ரைன் நாட்டின் அமைதிக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் செபிக்க தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்றார்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் இரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த 12 மாதங்களுக்குப் பிறகும், இன்றுவரை நடந்து கொண்டிருக்கும் போரை அறிவற்ற போர் என்று கண்டிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள, எண்ணற்ற முறையீடுகள், வேண்டுகோள்கள் வழியாக, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு தன் நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

“அரசியல் பொறுப்பில் உள்ளவர்கள் கடவுளுக்கு முன்பாக மனசாட்சியை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும், அவர் போரின் கடவுள் அல்ல, சமாதானத்தின் கடவுள் என்று அரசுத்தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தும், திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பின் பாதையை வளர்ப்பதற்கான உரையாடல் வழியாகவும் திருப்பீடத்தின் விருப்பத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

மேலும் திருப்பீடத்தின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski, வழியாக புலம்பெயர்ந்த உக்ரேனிய மக்களுக்கு தங்கள் இதயங்களையும் இல்லங்களையும் திறக்க உலக மக்களுக்கு வேண்டுகோள், செப வழிபாடு, நிதி உதவி, பொருள் உதவி என அனைத்தையும் திருப்பீடத்தின் சார்பாக செய்து தனது உடனிருப்பையும், நெருக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.