மோடி குறித்த வீடியோவை பிபிசி வெளியிட்டிருக்க கூடாது; இங்கிலாந்து எம்.பி கருத்து.!
மோடி குறித்த வீடியோவை பிபிசி நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடாது என இங்கிலாந்து கன்சர்வேடிவ் கட்சி எம்.பி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சிக்கு பாஜக எப்போதும் நட்புடனேயே இருந்திருக்கிறது என்று அக்கட்சியின் எம்.பி பாப் பிளாக்மேன் கூறியுள்ளார். பிபிசி என்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு அங்கம் அல்ல. பிபிசி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டது மிகவும் வருந்தத்தக்கது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இங்கிலாந்து-இந்தியா உறவை சீர்குலைக்க பிபிசி இது போன்று செய்ததாக தெரிகிறது என அவர் மேலும் கூறினார்.
2002 குஜராத் கலவரம் தொடர்பான, பிபிசியின் இந்த ஆவணப்படத்தில், நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலும், பின்னர் பிரதமராக இருந்த காலத்திலும் அவர் மீதான தாக்குதலுடன் கூடிய பத்திரிகையின் தரக்குறைவான செயலாக இது பார்க்கப்படுகிறது. பிபிசி இந்த வீடீயோவை வெளியிட்டிருக்கக்கூடாது என்று பாப் பிளாக்மேன் மேலும் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் பிரதமர் மோடியின் கீழ் இந்திய அரசாங்கம் குறிப்பிடத்தக்க பணியைச் செய்துள்ளது, மேலும் அது உலகின் முன்னணி பொருளாதாரமாக உருவாகும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மேலும் பிபிசி அலுவலக வருமான வரி சோதனை குறித்தும் கருத்து தெரிவித்த அவர், இந்தியாவில் சட்ட விதிகளைப் பின்பற்றுவது பிபிசி இந்தியாவின் கடமையாகும், அவர்கள் உரிய ஆவணங்களை சமர்பிக்கட்டும் என்று பிளாக்மேன் தெரிவித்துள்ளார்.