ஊதினா விழுந்து போற மாதிரி இருந்த அந்த ஒல்லிக்குச்சிப் பொடியனை அடிக்க ஒரு ஊருப்பட்ட பெடியள் அந்த மோட்டுச் சைக்கிளில வந்து இறங்கினாங்கள் பாருங்கோ!
- பூராயக் கிழவன் -
மெய்வெளி அபிமானியர்களுக்கு எனது இனிமையான வணக்கம் பாருங்கோ? வணக்கம் இப்ப அநேகம் பேர் பூராயக் கிழவனை எதிர்பார்க்கிறியள் எண்டு அறிய எனக்கு சந்தோசமா கிடக்குது பாருங்காே!
நான் வாராவாரம் வந்து நல்ல அலுவல்களைதான் உங்களுக்கு சொல்லுறன். அது உங்களுக்கு பிரயோசனமாய் இருக்கும் என்பது என்ரை அசைக்க முடியாத நம்பிக்கை பாருங்கோ? சரி… சரி.. இன்டைக்கு என்ன அலுவல் சொல்லுவம் அன்டைக்கு யாழ்ப்பாணம் ஒரு அலுவலா போனன். அங்க நடந்த ஒரு அலுவல் இருக்கு அது இஞ்ச மட்டுமல்ல இப்ப உலகமெல்லாம் நடக்கிற அலுவல் தான்.
என்ன அலுவல் எண்டால் யாழ்ப்பாணம் போய் அலுவலை முடிச்சுக் கொண்டு பேருந்து தரிப்பிடத்தில பேருந்து எப்ப வரும் எண்டு பார்த்துக் கொண்டிருந்தன் வீட்டை வாரத்துக்கு. அடக்கடவுளே! அதை ஏன் பேசுவான் அன்டைக்கு நடந்த அலுவல நினைக்க இன்டைக்கும் எனக்கு சிரிப்பா கிடக்குது பாருங்கோ!
என்ன விஷயம் என்றால் நான் பேருந்து தரிப்பிடத்திலே இருக்கிறன் ஒரு 25 ’30 மோட்டார் சைக்கிள் வரும் ஒரு மோட்டார் சைக்கிள்ள ரெண்டு ரெண்டு பேர் வாளுகள்’ கத்திகள்’ கொட்டனுகளோடே வந்து தொப்புத் தொப்பண்டு குதிக்கிறாரங்கள். ஒரு பக்கம் எனக்கு பதட்டமாய் கிடக்குது ஏன் தெரியுமே!
இவர்தான் பூராயக்கிழவன் எண்டு ஏதும் செய்யப் போறாங்களோ தெரியலை எனக்கு காலும் கையும் படபடக்குது. சரி ஒரு மாதிரி வெளிக் காட்டாமல் குடையை ஊண்டிக்கொண்டு இருந்துட்டன். எனக்கு பக்கத்துல ஒரு 16′ 17 வயது இருக்கும் ஒரு பெடியன் இருந்தான். அவனுக்கு அடிக்கத்தான் அந்த மோட்டார் சைக்கிள் குறூப் வந்ததாம் … எண்டு பிறகுதான் அறிஞ்சன் பாருங்கோ!
அது பாவம் பெடியன் ஊதிவிட்டால் விழுந்துபோகும். அந்தப் பையன் யாரையோ முறைச்சு பாத்துட்டானாம் அவர் உடனே தந்த குறூப்புக்கு ரெலிபோன் எடுத்தாராம் அதுதான் அவற்ற குறூப் வந்து குதிச்சாங்கள்.. ஏதோ தெய்வாதினமாய் எனக்கு பக்கத்துல இருந்த பெடியன் ஒரு மாதிரி பின்பக்கத்தால ஓடி தப்பிவிட்டான் பாருங்கோ?.. அதுக்குப் பிறகுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதி வந்துச்சு.அடக்கடவுளே! பெடியன் மாட்டுப்பட்டி ருந்தால் என்ன விபரீதம் நடந்திருக்கும்.
இப்படித்தான் இப்ப கன அலுவல்கள் நடக்குது பாருங்கோ! சொந்த பிரச்சனையை பொதுப் பிரச்சனையாக மாத்தி சமூகத்தை சீர் கெடுக்கிறது. உண்மையா வீரனுக்கு குறூப் தேவையில்லை .ஊதிவிட்டால் விழுந்து போகக்கூடிய பெடியன் முறைச்சா ஏன் முறைக்கிறாய் என்று கேட்டு அதிலேயே பிரச்சனையை முடியுங்கோ! ஏன் மாற்றான் மாதிரி வாள், கத்தி எடுக்கிறியள்.சின்னப் பிரச்சனைக்கு முகம் கொடுக்க முடியாமல் ரெலிபோன் எடுத்து குறூப் கூப்பிடுகிறது வீரம் இல்லை. அதுக்கு வேற பெயர் இருக்குது. சரி அதை ஏன் இதுல சொல்லுவான் சரி …சரி …இது உங்கட சிந்தனைக்காக சென்னன் அப்ப நான் போட்டு வாறன் அடுத்த வாரம் சந்திப்போம் பாய்… பாய்….