யார் சரி யார் பிழை என்றில்லாமல். அப்படி நடந்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ?

கேதீசின் "போக்காளி" - அனுஷா சோமசேகரன் -

 

முதல் பாகம்…..
நமது நண்பன் கேதீஸ் எழுதிய ‘போக்காளி’ புத்தகத்தை வாங்கியதுமே என்ன இது இவ்வளவு பெரிய புத்தகமாக இருக்கிறதே? இதை எப்படி வாசித்து முடிக்க போகின்றேன் என்ற எண்ணமமே முதலில் தோன்றியது.  ஆனால், புத்தகத்தை வாசிக்க தெடங்கியதும் அதில் உள்ளடக்கப்பட்ட விடையங்கள் தொடர்ந்து வாசிக்கவும் அடுத்தடுத்து என்ன வரப் போகின்றது என்ற ஆவலை தூண்டியது.

 

இளம் வயதிலேயே  தன் தந்தையை இழந்தவனான (குணா) கதையின் நாயகன்.  தாய் மண்ணையும், தாய் சகோதரர்கள், சொந்த பந்தத்தை விட்டு விட்டு கடந்த கால வலிகளையும் துன்பங்களையும் எதிர்கால திட்டங்களையும் சுமந்தவனாக  அன்னிய தேசத்தில் சட்டத்திற்கு முரணான உயிர் ஆபத்துக்கள் நிறைந்த பயணங்கள் மூலமாக ‘அகதி’ தஞ்சம் கோரிய ஒரு இளைஞனின் கதையாக 1988 ஆண்டில் ஆரம்பித்து…
அந்த பயணத்தினால் அவன் பட்ட சொல்லனா துயரங்களையும், அவஸ்தைகள்,  பயண அனுபவங்களையும் சந்தித்த மனிதர்களையும். அதனால் கற்றுக்கொண்ட பாடங்களையும் எடுத்துக்காட்டும் முகமாக  தொடங்கிய கதையில் பல “உண்மையான யதார்தமான’ சம்பவங்களையும் உள்ளடக்கியதாகவும் தொடர்கிறது…..2019 வரையில்.

 

கொஞ்சக் காலத்தால்   திரும்பவும் தன் தாய் மண்ணிற்கு  போக வோண்டும் அங்குதான் தன் வாழ்கையை வாழ வேண்டும் என்று பல  கனவுகளுடனுமாக அவனது பயணம் ஆரம்பித்த போதும்…நாட்டு நிலைமைகளும் சந்தர்ப சூழ்நிலைகளும் அதற்கு பெரும் தடையாகவே  தொடர்ந்தன…

 

அகதி முகாம் வாழ்க்கை அகதி அந்தஸ்தை பெறுவதற்கான போராட்டங்கள் வேலை வாய்புக்கான தேடி அலைந்த சங்கடங்கள் குடும்பத்தை இழந்து வந்து தவிக்கும் தவிப்புக்களும். முதல் தஞ்சம் கோரிய நாட்டில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்னொரு நாட்டுக்குள் சட்ட விரோதமாக உள்ளிட்டு அங்கும் நிராகரிக்கப் பட்டு திரும்பவும் முதல் சென்ற நாட்டுக்கு அனுப்பப்பட்டவனாகவும்.  நம்மவர் அகதி என்று தஞ்சம் கோரி வெளி நாடுகள் என்று வெளிக்கிட்டு . அந்தப் பயணங்களில் அவர்கள் அனுபவித்த உயிருக்கு ஆபத்தான உண்மை சம்பவங்களை. அகதி முகாம்களில் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும்  தன் எழுத்தின் மூலமாக  மிக எளிமையான உணர்வு பூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார் கேதீஸ் முதற் பகுதியில்.

 

“போக்காளி” நாவலின் இரண்டாவது பாகத்தில் ……

 

அடிக்கடி நடைபெறும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான அரசியல் கருத்து மோதல்கள் மூலமாக ஈழப் போராட்ட அரசியல் சார்ந்து  தாய் நாட்டின் மீதான அவர்களின் அக்கறையும் ஆதங்கமும் வெளிப்படுவதோடு நாட்டில் நடந்தவை நடப்பவை நடக்கப்போறவை  என உணர்ச்சிபூர்வமான கொந்தளிப்புடன்  கதை நகர்கிறது.

 

யார் சரி யார் பிழை என்றில்லாமல். அப்படி நடந்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ? அல்லது இப்படி நடந்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ என்ற அங்கலாய்ப்புடனும்,  ஈழப் போராட்ட முடிவில் எங்கு தவறு நடந்தது? ஏன் நடந்தது? யாரால் நடந்தது? போன்ற கேள்விகளூடே  உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய கருத்துக்களையும் காணக்கூடிய மாதிரியான கதைக்களமாக நகர்ந்தாலும். இந்த நாவலில் அடித்தளமாக இருப்பது மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற ஈழப்போர் தந்த வலிகளே.  அரசியல் நிகழ்வுகள் ராணுவ நடவடிக்கைகள் அதன் விளைவுகள், அதனால் ஏற்பட்ட புலம்பெயர்வுகள் அதன் தாக்கங்கள் என்பவற்றை கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமாக கதையின் கருவை நகர்த்திச் செல்கிறார் கதாசிரியர் கேதீஸ்.

 

கதை 1988 முதல் 2019 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இருப்பதோடு ஒவ்வொரு ஆண்டும் நடந்த முக்கிய சம்பவங்களை முன்னிலைப்படித்தி வாசகர்களை தன் கதைக்குள் கட்டிப் போட்டு ‘கடிவாளம் பூட்டிய குதிரையைப் போல்’ வாசகர்களின் புலன்களை எங்கும் போக விடாது தன் கதைக்குள் கட்டிப்போட்டிருக்கும் எழுத்துநடை மிகவும் சிறப்பானதே.

 

தாயக விடுதலை போராட்டம் அரசியல் தாக்கங்கள் வெற்றிகள் தோல்விகள் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வியற் சமூக அனுபவங்கள், ஈழத்தவர்களின் அரசியல் தழுவிய நெருக்கடிகள், உணர்வுகள், மற்றும் மன உளைச்சல்களையும் மையமாகக்கொண்டு இரு வேறு கருத்து நிலைகளைக் கொண்ட  நண்பர்களின் தரமான நிஜாஜமான உரையாடல்களாக கதை தொடர்கிறது. அரசியல் கருத்து நிலைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலுங்கூட அதனால் அவர்களின் நட்புக்கு எதுவித  பாதிப்பும் ஏற்படவில்லை. சொந்த நாட்டின் மீதும் அங்குள்ள மக்கள் மீதுமுள்ள அவர்களது அளவற்ற அக்கறைகளே உரையாடல்களில் வெளிப்படுகிறது.

 

அதுதான் எதார்த்தம். எதார்த்தமான வாழ்க்கையில் சில உண்மைகள் கசக்கத் தான் செய்யும், அதற்காக அது பொய்யாகி விடுமா என்ன ? இன்றைக்கு எதார்த்தமான வாழ்கையை நோக்கி நாம் பயணிக்கக்கூடிய சூழ்நிலையில் மீண்டும்மீண்டும் உணர்ச்சிபூர்வமான கொந்தளிப்பு நிலையில் இல்லாமல் அறிவுபூர்வமான சிந்தனைகளுக்கு  முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதையே நாவல் கோடிட்டுக் காட்டுகிறது.  முக்கிய கதாபாத்திரங்களான இரு நண்பர்களுக்கு இடையிலான தர்க ரீதியான உரையாடல்கள் மூலமாக உண்மை நிகழ்வுகளை எடுத்து செல்லும் கதாசிரியரின் எழுத்தாற்றலை இங்கு பாராட்டாமல் இருக்க முடியாது.
கணவன் மனைவிக்குமான காதல் உணர்வுகள் அன்னியோன்னியம், ஊடல்கள், கோபம், கெஞ்சல் கொஞ்சல்களை இடை இடையே உட்புகுத்தி தீவிரமாக போகும் கதையை அப்பப்ப திசை திருப்பி வாசிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தா வண்ணமாக  குணா & ஆதிரா பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டு அழகியலோடு நாவல் நகர்கிறது.
நமது பழம்பெரும் அரசியல்வாதிகளை அறிவாளிகளை, கலைஞர்களை  இழந்ததால் / இழப்பதால் நம் தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படும் பேரிழப்புக்கள். இதனால் தமிழ் சமுதாயம் எதிர்கொள்ள போகும் விளைவுகள். இதை எப்படி தடுப்பது? போன்ற மனக் குமுறல்களையும் எதிர்கால சமூகம் எப்படி இருக்கும் என்ற ஏக்கங்களையும்  கதாபாத்திரங்கள் வெளிப்படுத்துகின்றன.

 

முக்கியமாக சொல்ல வேண்டிய விடையம் என்னவென்றால் எங்கேயுமே தனி மனித தாக்குதல்களோ அல்லது குழு / இனம் சார்ந்த தாக்குதல்களோ இல்லாமல். கருத்துக்களையே முக்கியமாக வைத்து வாதாடுகிறார்கள். ஆங்காங்கே அந்ததந்த ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவங்களான ராஜீவ் காந்தி கொலை, கவிஞர் செல்வி கடத்தல், மாத்தையா கைது, கருணா பிளவு , தமிழ்ச்செல்வன் கொலை, பால்ராஜ் & அன்ரன் பாலசிங்கம் இழப்பு என நிறையத் தகவல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதுமட்டுமின்றி ஆனையிறவு மீட்பு , கட்டுநாயகா தாக்குதல், ஆழிப் பேரலை, முள்ளிவாய்க்கால்  வரையெனக் கதையை கொண்டு செல்லும் கேதீஸ் ஈழப் போராட்டத்தின் சம்பவம்களை எவ்வளவு நுனுக்கமாக அவதானித்து ஆராய்துள்ளார் என்பதையும் ஆச்சரியத்துடன் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

 

யுத்த காலத்தில் நம்மின மக்கள் பட்ட துன்ப துயரங்கள் இழப்புக்கள் என சொல்லி அடங்காமல் சில ஆண்டுகள் கழிந்தபின் தாயையும் தாய் மண்ணையும் காண ஆவலுடனும் கற்பனைகளுடனும் தாயகம் திரும்பிய நாயகன் குணா முகம் கொடுக்கும் கெடுபிடிகளானது சொந்த நாட்டிலேயே அன்னியன் போலான உணர்வுகள் அவனை மேலும் வாட்டியது. அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கும் வெடிச் சத்தங்கள், ஆங்காங்கே நடக்கும் கொலைகள் எனவும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத் துன்பம்கள், துயரங்கள் இடப்பெயர்வுகள் என நம் மக்கள் படும் அவலநிலையை பார்க்கவும் கேட்கவும் குணாவால் முடியவில்லை. என்னடா வாழ்க்கை இது? ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைத்து நிம்மதி இல்லாமல் வாழ்வதா வாழ்க்கை. இது எப்போ தீரும்? இதற்கு காரணம் யாரு? இதற்கு சரியான பாதை ஆயுதரீதியிலான  போராட்டமா? சமாதானமான பேச்சு வார்த்தையா? இப்படி அவனுக்குள் எழுந்த கேள்விக் கணைகள் அவனது நிம்மதியான மன நிலையைக் குலைப்பவையாகவே இருந்தன.

 

ஒரு கதை சொல்லியாக கேதீஸ் வெளியே நின்றுகொண்டு நாவலின் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் மூன்று நபர்களான குணா, விஸ்வா, மணியமண்ணை ஆகியவர்களின் உக்கிரமான அரசியல்  உரையாடல்கள் மூலமாக  கதையை நகர்த்தியிருப்பதோடு நண்பர்களுக்கிடையிலான உரையாடல்களை சரியான சமநிலையாகவும் சமசீரகவும் கொண்டு சென்றுள்ளார்.

 

“போக்காளி” 3ம் பாகத்தில்….

 

கேதீஸ் எடுத்துக் கொண்ட விடயமானது எம்மவர்கள் புலம்பெயந்து வாழும் நாடுகளில் முதல் தலைமுறையினருக்கும் இரண்டாம் தலைமுறையினருக்கும் இடையிலான கலாச்சார முரண்பாடுகளே. கதையின் நாயகனும் இந்தச் சிக்கலில் சிக்கித் தவிப்பதையும், அதனால் ஏற்படும் மனப்போராட்டங்களையும் எதார்த்தபூர்வமான கதை ஓட்டத்துடன் விளக்கியுள்ளார் கேதீஸ்.

 

இதனால் நம் பெற்றோர்கள் எதிர் கொள்ளும் கலை, கலாச்சார,  ஜாதி, மத & மொழி சார்ந்த சீரழிவுகள். அதனால் குடும்பங்களுக்குள் ஏற்படும் பிறழ்வுகள்/ மனஸ்தாபங்கள் என்பவற்றை வெவ்வேறு கோணங்களில் சிந்தித்து அதை உணர்வு பூர்வமான உண்மை சம்பவங்களை மையமாக வைத்து கிடுகு பின்னுவதுபோல் கதையை லாவகமாக பின்னியிருக்கிறார். நாவலை வாசிக்கும் போது நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பார்த்த கேட்ட அல்லது அறிந்த சம்பவங்கள் போலவே தோன்றுகின்றது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான கருத்து வேறுபாடுகள் அதனால் ஏற்படும் மனக் குழப்பங்கள் மன அழுத்தங்கள் என்று உணர்வுபூர்வமாகவும் எதார்த்தபூர்வமாகவும் கதை நகர்கிறது.

 

புலம்பெயர் நாடுகளில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் இந்த கலாச்சார முரன்களால் எவ்வாறு தமக்குள் போராடிக் கொண்டு “மென்னவும் முடியாமல் விழுங்க முடியாமல்” இருதலை கொள்ளி எறும்புகள் போன்று அவர்கள் படும் பாடுகளைப் பெரும்பாடாய் காட்சிப்படுத்துகின்றார் கேதீஸ்.
ஆனால் இங்கு பிறந்து வளரும் பிள்ளைகள் தமது கலை, கலாச்சார, மொழி, பண்பாடுகளாக பின்பற்றுவது அவர்கள் பிறந்து வளர்ந்த வாழ்வியற் சூழலில் பின்பற்றப்படுகின்றவையே தவிர பெற்றோர்கள் பின்பற்றியவைகள் அல்ல. ஆனாலும் சில இடங்களில் பெற்றோரின் கெடுபிடியால் பிள்ளைகளும் எந்த கலாச்சாரத்தை பின்பற்றவதென்று தெரியாமல் “இரண்டு தோணியில் கால் வைத்தவர்களாக”அவஸ்தை படுவதையும் அதனால் ஏற்படும் குழப்பங்களையும் சுட்டி காட்டியுள்ளார் கேதீஸ்.

 

கேதீசின் இந்த எழுத்தாற்றலை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.  அவர் ஒவ்வொரு கசப்பான உண்மைகளைக் கையாண்ட முறைகள். கடினமான கருத்தைத் தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்கிச் சிறப்பாகச் எழுதியுள்ளார்.

 

அவரது அரசியல் ஆராய்ச்சியின் முழுமையையும் அதற்கான அவரது நுண்ணிய அறிவையும் நான் படித்து வியந்தேன்  பாராட்டுகிறேன். தாய் நாட்டில் நடந்த சம்பவங்களையும் அதற்கான அவரது விளக்கங்களையும் கதாபாத்திரங்களை தர்க்க ரீதியான உரையாடலுக்குள் இழுத்து மோத விட்டதையும் படித்து வியந்தேன்.

 

கேதீசின் புத்தகத்திற்கு உலகில் நல்லதெரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர் நமது நட்பு வட்டாரத்திற்குள் உள்ளனர் என்பது நமக்கும் பெருமையே.
எழுத்தாளர்கள் மெழுகுவர்த்தியைப் போன்றவர்கள், நமக்கு வெளிச்சத்தைத் தருவதற்காகத் தன் சுயத்தை எரித்துவிடுகிறார்கள் என்பது கேதீஸ் விடயத்தில் முற்றிலும் உண்மை. அவர் பல வருடங்களாக இதற்காக உழைத்துருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
கேதீசின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
எதிர்காலத்தில் கேதீசிடமிருந்து மேலும் பல புத்தகங்களை எதிர்பார்கலாம் என நம்புகிறேன்.

 

போக்காளி’

இவனிந்த உலகில்
அடியெடுத்து வைத்தபோது
இவனுக்கே தெரிந்திருக்குமோ தெரியாது
தான் எடுத்து வைத்த அடி ஆளமானதும்
அகலமானதுமென்று.

 

இவனைக் கையில் எடுத்தவர்கள்
கீழே வைக்க முடியாமல்
திணறிக்கொண்டு இருக்கின்றார்களாம்.

 

இவனைப் படிக்க ஆசைப்பட்ட எவருமே
முளுமையாக படிக்காமல் விட்டதுமில்லை.
உண்மையை உரத்துக் கூறுகிறானென்று
இவனைப் பாராட்டாமலும் இருந்ததில்லை.
பாராட்டுக்களாலும் வாழ்த்துக்களாலும்
இவன் புகழ் உலகளாவியப் பரவுகிறது.

 

போக்காளியைப் பலர் அறிந்தனர்.
சிலர் அறிந்தும் அறியாதவர் போல் நடித்தனர். இன்னுஞ்சிலர் வாசித்தும்
வாசிக்காதவர் போல் கதை விட்டனர்.
வாசித்தவர்களை என் கதைபோல் இருக்கிறதே
என் கதையும் இப்படித்தானே
என்றுணரவும் வைத்தான் போக்காளி.

 

போக்காளி என் மனதையும்
புத்துணர்ச்சியடையச் செய்தான்.
நேர்மறை எண்ணங்களை ஊக்குவித்தான்.
யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளாத
விஷயங்களைக் கற்றுத்தந்தான்.
போக்காளியை வாசித்தபின்
நான் இதுவரையில்
மெய்யென நாம்பியிருந்தவைகள்
பொய்யாக மாறின.
பொய்யென நம்பியிருந்தவைகள்
மெய்யாகத் தோன்றின.

 

போக்காளியை வாசிக்கும் போது என் பொதுப்புத்தியில் அதுவரை தெரியாத தகவல்கள், உண்மைகள் விழுமியங்கள் எல்லாவற்றையும் பற்றிய கேள்விகள் எழுந்தன.

 

நல்ல புத்தகங்கள்
நல்ல நண்பர்கள் என்பார்கள்
போக்காளியும் ஒரு நல்ல நண்பனே.
புத்தகங்கள் இல்லாத அறை
உடல் இல்லாத ஆத்மா போன்றது.
புத்தகம் என்பது நீங்கள் மீண்டும் மீண்டும்
திறக்கக்கூடிய ஒரு பரிசு.
அதுபோல் போக்காளியும் தன்னைத்
திரும்பத் திரும்ப திறக்க வைப்பான்.

 

வாசிப்பு என்பது ஒரு உரையாடல்.
எல்லா புத்தகங்களும் பேசும்
ஆனால் ஒரு சில நல்ல புத்தகங்களே
கேட்கவும் செய்யும்.
போக்காளியும் அப்படி தான்
திரும்பத் திரும்ப கேட்கவும் செய்வான்.
நல்ல புத்தகம் போல  விசுவாசமான
நண்பன் இல்லை என்பார்கள்
தற்போதைக்கு என் விசுவாசமான நண்பன் போக்காளி தான்.
நான் அவனை முழுமையாக நம்புகிறேன்.

 

வாசகப் பெருமக்களே
நீங்களும் போக்காளியின்
கையைப் பிடித்தீர்களெனில்
கடைசிவரை அவனுடன்
பயணித்தபடியேதான் வருவீர்கள்.

 

முடிவில் நீங்கள் ஒரு சிறந்த புத்தகத்தைப்
படித்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவரும்.
போக்காளியின்
கடைசிப் பக்கத்தைப் புரட்டும்போது, ​​
நீங்கள் ஒரு சிறந்த நண்பரை
இழந்துவிட்டதாகவே உணர்வீர்கள்.

 

இப்படியாகப் போக்காளி என்னையும் வித்தியாசமாகச் சிந்திக்க வைத்தான்.

 

ஆகவே இது போன்ற புத்தகங்களை
மென்மேலும் படைக்க வோண்டுமென
 எழுத்தாளர் நவமகனிடம் கேட்டுக்கொண்டு
ஆங்கில மேற்கோள் ஒன்றுடன் முடித்துக்கொள்கின்றேன்