இலங்கைக்கு ஐ.நா. நிதி உதவி.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகளும், பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உதவி வருகின்றன.
குறிப்பாக கடுமையான விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு ஐ.நா. போன்ற அமைப்புகள் நேரடியாகவே உதவிகளை வழங்கி வருகின்றன.
அந்தவகையில் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எப்.ஏ.ஓ.) சார்பில் 47,609 விவசாய குடும்பங்களுக்கு ஏற்கனவே 2,300 டன் உரம் வழங்கப்பட்டு உள்ளது.
15 ஆயிரம் குடும்பங்கள் இதைத்தொடர்ந்து மிகவும் ஏழை மற்றும் பின்தங்கிய 15,000 குடும்பங்களுக்கு பணமாகவே 1.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.11 கோடி) வழங்கப்பட்டு உள்ளதாக எப்.ஏ.ஓ. தெரிவித்து உள்ளது.
இந்த அமைப்பு கடந்த ஜூன் முதல் இந்த மாதம் வரை பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளின் அறிக்கையில் இது வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்த அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:-
இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது, மேலும் அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்பால் நாட்டின் நிலைமை மோசமடைகிறது.
இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதத்தினர் விவசாயத்தை முதன்மை வருமான ஆதாரமாக நம்பியுள்ளனர்.
உற்பத்தி சரிவு எனவே உரங்கள் மற்றும் பிற அத்தியாவசிய உற்பத்தி உள்ளீடுகள் கிடைக்காததால், 2021-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து விவசாய உற்பத்தி சரிவடைந்து வருகிறது.
கால்நடை பராமரிப்பாளர்களால் தீவனம் மற்றும் அடிப்படை கால்நடை பொருட்களை பெற முடியவில்லை. மேலும் மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை.
இதனால் மேற்படி தேவைகளில் இருப்போருக்கு பல்வேறு வகையில் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.