High Wycombe பகுதியில் பெரும் ஈடுபாட்டோடு இயங்கிவரும் மெய்வெளி நாடகப் பயிலக பயிற்சியாளர்கள்

“ஒரு தடவை தான் நாம் பிள்ளைகளைக் கூட்டி வந்து இந்த பயிலரங்கில் இணைய வைத்தோம். தொடர்ந்த ஒவ்வொரு வாரத்திலும் அவர்களே எங்களை இங்கு அழைத்துப் போக நிர்ப்பந்தித்தார்கள்”

மெய்வெளி நாடகப் பயிலகத்தில் பயிற்சி பெறும் பெரும்பான்மையான பயிற்சியாளர்களின் பெற்றோர்களுடைய கூற்று இதுவாகத்தான் இருக்கிறது. தமக்கான மிகச் சரியான வெளியொன்று உருவாக்கப்படும் போது அதை மிகுந்த ஆர்வத்தோடு தம் வயமாக்குவதில் புலம் பெயர் சிறுவர்கள் எப்போதும் ஆர்வம் காட்டியே வருகிறார்கள் என்பதற்கு High Wycombe பகுதி சிறுவர்கள் நல்லதொரு எடுத்துக்காட்டு.

ஆடல், பாடல், இசை, அசைவு, அரங்க விளையாட்டுக்கள், குழுச் செயற்பாடுகள், உடல் தளர்வுப் பயிற்சிகள், மன ஒருங்கிணைவுப் பயிற்சிகள்,மூச்சுப் பயிற்சிகள், சொல் வள மற்றும் மொழி வளப் பயிற்சிகள், உடல்ச் சமநிலை, படைப்பாக்கத்திறன், கற்பனாசக்தி, சொற்களஞ்சிய விருத்தி என அரங்க நுட்பங்களை முன்னிறுத்திப் பயிற்றுவிக்கப்படும் இந்த பயிற்சி நெறிக்கூடாக பலவற்றை பிள்ளைகள் கற்றுக் கொள்ளவும் அனுபவப்படுத்திக் கொள்ளவும் வழி செய்யப்படுவதை அவதானிக்க முடிந்தது.

தத்தமது குடும்பச் சூழல் என்ற தனி மனித வாழ்வில் இருந்து வெளியே வந்து பல்வேறு இயல்பு நிலைகளில் உள்ள ஏனைய குழந்தைகளுடன் ஆடிப் பாடி, கருத்துப் பரிமாறி, உடன்பட்டு முரண்பட்டு ஒரு கூட்டுச் சமூக மனநிலைக்கு பிள்ளைகளைத் தயார்ப்படுத்தி பொதுவெளிக்கும் சமூக வெளிக்கும் அனுப்பி வைப்பதற்கு சிறு வயது முதல் தொடர்ச்சியாகப் பங்குகொள்ளும் இத்தகைய அரங்க ஈடுபாடு நன்மை பயக்கிறது என்பதை பல பெற்றோர் ஆழமாக நம்பத் தொடங்கியுள்ளனர்.

லண்டனில் பல்வேறு இடங்களில் அரங்கப் பயிற்சி நெறிகளினூடாக பிள்ளைகளின் கல்வி. கலை, தனி மனித ஆளுமை விருத்திக்கு பங்காற்றி வரும் மெய்வெளி நாடகப் பயிலக நிர்வாகத்தினர் எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் ஒன்றை, பல்வேறு இடங்களில் பயிலும் தமது பயிற்சியாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் இணைத்து நிகழ்த்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.