24 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த விடயத்தில் தலையிடக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
24 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த விடயத்தில் தலையிடக் கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய இழுவை படகுகளை விரட்டியடிப்பதற்காக கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் நேற்று மாலை வடக்கு கடற்பரப்பில் விசேட நடவடிக்கையை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, யாழ்ப்பாணம், காரைநகர், கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் உள்ள தீவுக் கடற்பரப்பில் 24 இந்திய மீனவர்களுடன் 05 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இழுவை படகுகளுடன் 24 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, இந்த வருடத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 35 இந்திய இழுவை படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 252 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய வெளியுறவுத் துறை எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, இந்திய மீனவர்களை கைது செய்யக் கூடாது என்று இலங்கை கடற்படைக்கு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.இந்திய மீனவர்கள் அனைவரையும் விரைவில் விடுவிக்கவும், இலங்கை பிடியில் உள்ள படகுகளை விடுவிக்கவும் ஸ்டாலின் தமது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.