முதலிகே, சிறிதம்ம தேரரின் விடுதலைக்கு சர்வதேச அழுத்தத்திற்கு கோரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு மாணவர் செயற்பாட்டாளர்களின் தடுப்புக் காலம் முடிந்த பின்னர் அவர்களை தடுத்து வைக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு, இலங்கையிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழுவொன்று சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியாகும் நவம்பர் 18, 2022அன்னு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கான ஆதரவை வரவேற்றுள்ள இலங்கை சிவில் சமூக ஆர்வலர்கள், கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை அழைத்து, அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர்களை நிபந்தனையின்றி விடுவிக்கவும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
150 சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் 75 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பத்து தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதன் ஊடாக நவம்பர் 15, செவ்வாய்கிழமை அவர்கள் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த அண்மைய மக்கள் எழுச்சியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழில் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் பங்களிப்பை நினைவு கூறும் கடிதத்தில், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடி பொருட்கள் மற்றும் சேவைகளின் தாங்கிக்கொள்ள முடியாத விலை அதிகரிப்பு, மோசமான நிர்வாகம், ஊழல் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் இப்போது தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவதற்கான தயார் நிலை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.