உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்புலத்தில் இருப்பவர்கள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.-பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்புலத்தில் இருப்பவர்கள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இருப்பினும் தங்களின் பாவங்களுக்கு மிகவும் வேதனையான கர்மவினையை சந்திக்க நேரிடும் என்றும் தவறை ஏற்றுக் கொள்ளுங்கள் அதனை நாம் மன்னிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு கனேமுல்ல, பொல்லத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுத்திட்டத்தை குறித்த குடும்பங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது பேராயர் இதனை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று  முன்னாள் ஜனாதிபதி எனக்கு தனிப்பட்ட வகையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமக்கு வந்த மறுநாளே அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்து அவற்றையெல்லாம் எவ்வாறு வெளிப்படையாகக் கூற முடியும்? என்று கேட்டார்.

அறிக்கைகளை சிபாரிசு செய்ய வேண்டியது நீங்கள் இல்லை இதனை பொலிஸாரிடம், நீதிமன்றத்திடம் ஒப்படையுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் ஒன்றும் கூறவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர். ஏன் அவருடைய பொறுப்புகளை மறைப்பதற்கு முயற்சிக்கிறார். அதன் பின்னணியில் அரசியல் சதி ஒன்று இருப்பதாக பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பல தெளிவற்ற விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை வெளிக்கொணர்வதற்கு எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.

சட்டா அதிபர் திணைக்களத்திற்கு கண்களும் இல்லை, காதுகளும் இல்லை,அதனால் ஒன்றையும் செய்வதற்கு முடியாது உள்ளது.

தற்போது நாட்டில் செவிடான யானைகள் மற்றும்  ஒரு பெரிய யானையும் அதன் கூட்டத்துடன் வந்துவிட்டது. அவர்களிடம் வீணை வாசிப்பது பயணற்றது.

சட்டத்தை நினைத்தப்படி மாற்றி இதை வைத்து அதனை கை கழுவி விடலாம் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு  நினைத்தால் மற்றவர்களுக்கு ஹீரோவாக தோன்றலாம். ஆனால் ஒன்று நினைவில் இருக்கட்டும். வேதத்தில் உள்ளது.  நீங்கள் செய்த பாவங்கள் உங்களை பின் தொடரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.