படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்- அமெரிக்க செனட் சபை குழு!
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனை நேற்றைய தினம் மாலை சந்தித்து கலந்துரையாடினர்.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து ஒரு மணிநேரம் வரை தவிசாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் சோ.சுகிர்தன், படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள், பல ஆண்டுகளாகியும் மக்கள் மீள்குடியேற்றப்படாமை, படையினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
1614 ஏக்கர் காணியை சுவீகரிப்பது தொடர்பாக கடந்த மாதம் சுற்றுலா மற்றும் காணி அமைச்சால் பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் தொடர்புடைய ஆவணங்களும் அமெரிக்க செனட் சபையின் குழுவினருக்கு கையளிக்கப்பட்டது.
பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் இதனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வோமெனவும் அமெரிக்க செனட் சபையின் குழுவினர் தெரிவித்தார்கள் – என்றார்